Tuesday, May 31, 2011

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்


   
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

 அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.   அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.

 எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?

 என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.

 பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:
  பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)

 அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

 வலியுறுத்திக்கேட்பது:
 அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.

 அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.

 பாவமானதைக் கேட்கக் கூடாது:
 அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு)ப் பதில் அளிக்கப்படாது.
 அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்

 அவசரப்படக்கூடாது:
 பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.

 நிராசை அடையக்கூடாது:
 சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)

 ’என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!

 உணவு உடை ஹலாலாக இருத்தல்:
  நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங் கள். (2:172) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலி ஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச் சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (23:51)

 ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

 அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதி கப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம் பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.

 ’உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்க வாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘அல்லாஹ் அதிகமாக்குவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஸயீத்(ரழி) நூல்: அஹ்மத்.

 ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யும்போது அவனை வெறுங்கையு டன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பு: சல்மான்(ரழி) நூல்:இப்னு மாஜா.

 பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்:
 கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிரா ர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவின் கடைசியிலும், கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பு: அபூஉமாமா(ரழி) நூல்: திர்மிதீ

 இரவின் கடைசி நேரத்தில்…
 இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இற ங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி 1ஃ1145 அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)

 ஸஜ்தாவின்போது….
 ஓர்அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக் கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன் னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.

 பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்..
 பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: அபூதாவுத்.

 தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது….
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய் யும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னு மாஜா

 ஜும்ஆ நாளில்…..
 வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட் டினார்கள். அபூஹுரைரா(ரழி) புகாரி.

 நோன்பாளி நோன்பு திறக்கும் போது…
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது. 1. நீதியான அரசன், 2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை 3. நோன்பாளி நோன்பு திறக்கும்போது கேட்கும் பிரார்த்தனை.  அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னுமாஜா.

 எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்.
 அபூயாசிர், உடன்குடி

www.readislam.net

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

K.L.M இப்றாஹீம் மதனி
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா
அடிப்படை விளக்கம்
அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது.
அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின் தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது.
படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது.
அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது.
அல்லாஹ் தன்னைப்பற்றி அல்குர்ஆனில் கூறியிருக்கும் வசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும்.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ  وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
..... அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை அவன் (யாவற்றையும்) செவியுறுபவனாகவும்) உற்று நோகியவனாகவும் இருக்கிறான். (ஸுரா அஷ்ஷுறா 42:11)
இதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறியிருக்கும் எந்த தன்மைகளையும் அவை அவனுக்கு இல்லை என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களை மாற்றக் கூடாது. அவைகளை புரட்டி, திருத்தி மாற்றுப் பொருள் கூறவும் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களிலும் அவனது அழகிய திருப்பெயர்களிலும் முரண்பட்ட பொருளை புகுத்தக்கூடாது. எந்நிலையிலும் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு படைப்பினங்களின் தன்மைகளை உவமையாக கூறக் கூடாது.
நிச்சயமாக அல்லாஹ்விற்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு சமமானவரும் எவரும் இல்லை. அவனுடைய தன்மையைப் பெற்றவரும் எவருமில்லை. அல்லாஹ்வை அவனது படைப்பினங்களைக் கொண்டு கணித்துவிடக் கூடாது. கணித்துவிடவும் முடியாது. அல்லாஹ் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிக அறிந்தவன். அவன்தான் முற்றிலும் உண்மையை உரைப்பவன். அவனது படைப்பினங்கள் அனைத்தையும் விட அவன்தான் மிக அழகிய முறையில் பேசுபவன். ஆகவே அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் சரியானைவையும், உண்மையானவையுமாகும். அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் தன்மைகளுடன்தான் நாம் அவனை ஈமான் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அவனது தூதர்கள் அனைவரையும் உண்மையாளர்கள் என்றும் அல்லாஹ்வால் மெய்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் நம்பிக்கைக் கொள்ளவேண்டும். ஆகவே இறைத்தூதர்கள் அல்லாஹ்வைப் பற்றி கூறியுள்ள அழகிய தன்மைகள் அனைத்தும் அவனுக்கு உரியனவே என ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப் பற்றி உறுதியான ஆதாரமும், தெளிவான அறிவுமின்றி பேசுபவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது. இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.
இவ்வசனங்களிலிருந்து நாம் விளங்க வேண்டியவை என்னவெனில்:
1. இறைத்தூதர்களுக்கு முரண்பட்டு அல்லாஹுவை பற்றி வர்ணிப்பவர்களின் வர்ணணைகளை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
2. இறைத்தூதர்கள் அல்லாஹுவை பற்றி கூறுவது அனைத்தும் எல்லாக் குறைகளை விட்டும் தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டது. எனவேதான் அவர்களுக்கு அவனது அருளும் பாதுகாப்பும் உண்டு என வாக்களிக்கின்றான்.
3. அல்லாஹ் அவனுக்கு வைத்துக் கொண்ட பெயர்களிலும், அவன் வர்ணிக்கும் அவனது அழகிய பண்புகளிலும் அவன் கூறும் முறை என்னவெனில், அவன் தனக்கு தகுதியற்றதை தன்னிடம் இல்லையென்றும், தனக்கு தகுதியானதை தனக்கு இருக்கின்றது என்றும் கூறுகின்றான்.
எனவே, நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றும் நன்மக்கள் எந்நிலையிலும் அல்லாஹ்வின் தூதர்கள் கற்றுக் கொடுத்த இறைக் கொள்கையிலிருந்தும், ஈமானிய வழியிலிருந்தும் திரும்பிடக் கூடாது. நிச்சயமாக இதுவே மிக நேரான வழியாகும். இது அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள் .இறைத்தூதர்கள், "ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள், "ஷஹீத்' என்ற இறை பாதையில் உயிர்நீத்த தியாகிகள், "ஸôலிஹ்' என்ற நல்லோர்கள் ஆகியோரின் வழியாகும்.
அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்துள்ள வசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்று கூறப்பட்ட சூரத்துல் இக்லாஸ் இக்கருத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ  وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. (ஸூரா அல்இக்லாஸ் 112:1-4)
மேற்கூறப்பட்ட திருவனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள  வேண்டியவைகள்:
1) அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும். இது "இலாஹ்' என்ற பதத்திலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன்' என்பதாகும்.
2) அல்லாஹ் ஏகனே. அவனது உள்ளமை, அவனது பெயர்கள், அவனது தன்மைகள், அவனது செயல்கள் அனைத்திலும் அவனுக்கு இரண்டாமவர் இல்லை, அவனுக்கு நிகரானவர் இல்லை, அவனுக்கு ஒப்பானவர் இல்லை.
3) அஸ்ஸமது (தேவையற்றவன்) என்ற வார்த்தையின் பொருளாவது "தனது ஆட்சி, அறிவு, கண்ணியம், சிறப்பு அனைத்திலும் அவன் பூரணமானவன். அவன் யாருடைய தேவையுமற்றவன், அவனைத் தவிர யாவரும் அவன்பால் தேவையுடையவர்களே.
4) அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அதாவது அவன் யாருடைய தகப்பனுமல்ல. அவன் எவருக்கும் பிறந்தவனுமல்ல. அதாவது அவன் எவரின் பிள்ளையுமல்ல. அவன் முற்றிலும் படைப்பினங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனே முந்தியவனும் முதலாமவனுமாவான். படைப்பினங்களை விட்டும் படைப்பினங்களின் தன்மையை விட்டும் முற்றிலும் தூய்மையானவன்.
5) ஆகவே, அவனுக்கு நிகராக எவருமில்லை. அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. அந்த படைப்பினங்களில் எதுவும் அவனுக்கு சமமாகவோ நிகராகவோ ஒப்பானதாகவோ இல்லவே இல்லை. அல்லாஹ்தான் பூரணமானவன்.
இவ்வாறே திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் என்று வர்ணிக்கப்பட்ட "ஆயத்துல் குர்ஸி' என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ‌ۚ لَا تَأۡخُذُهُ ۥ سِنَةٌ۬ وَلَا نَوۡمٌ۬‌ۚ لَّهُ ۥ مَا فِى ٱلسَّمَـٰوَٲتِ وَمَا فِى ٱلۡأَرۡضِ‌ۗ مَن ذَا ٱلَّذِى يَشۡفَعُ عِندَهُ ۥۤ إِلَّا بِإِذۡنِهِۦ‌ۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ‌ۖ وَلَا يُحِيطُونَ بِشَىۡءٍ۬ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَآءَ‌ۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَٲتِ وَٱلۡأَرۡضَ‌ۖ وَلَا يَـُٔودُهُ ۥ حِفۡظُهُمَا‌ۚ وَهُوَ ٱلۡعَلِىُّ ٱلۡعَظِيمُ
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
மேற்கூறப்பட்ட திருவசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை:
1) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவன் இல்லை. எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. அல்லாஹ்விற்கு செய்யும் வணக்க வழிபாடுகளை அவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக்கூடாது.
2) அவனே என்றென்றும் உயிருள்ளவன்; நிலையானவன். அவனைத் தவிர  இவ்வுலகத்தில் உள்ள அனைத்து வஸ்துக்களும் அழியக்கூடியவையே ஆகும்.  அவனுக்கு மரணமுமில்லை, சிறு தூக்கமுமில்லை. அவன் எந்நேரமும் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்தவனாகவே இருக்கின்றான். வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. ஏனெனில் அவனே அவைகளை படைத்தான். அவைகளை படைக்கும் விஷயத்தில் அவனுக்கு வேறு எந்த உதவியாளரும் இல்லை. அவ்வாறே படைப்பினங்களை நிர்வகிப்பதிலும் அவனே முழு அதிகாரம் பெற்றவன்.

3) அவன் அனுமதி கொடுக்காமல் எவரும் எவருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. படைப்பினங்கள் எவ்வளவுதான் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் அடிமைகளே. அல்லாஹ்வே அனைத்தையும் அடக்கி ஆளும் அகிலங்களின் அனைத்தின் அரசனாக இருக்கின்றான். அவனிடம் எவரும் துணிவு கொள்ளவோ அதிகாரம் செலுத்தவோ அவனை நிர்பந்திக்கவோ முடியாது. எவரும் அல்லாஹ்விடத்தில் தனக்குரிய அந்தஸ்தைக் கொண்டு தான் விரும்பியவர்களுக்கெல்லாம் அவனிடம் பரிந்துரை செய்யலாம் என்று துணிந்துவிட முடியாது. மாறாக, பரிந்துரை செய்வதற்கும், யாருக்காக பரிந்துரை செய்யலாம் என்றும் அல்லாஹ் அனுமதி வளங்க வேண்டும். அப்போதுதான் பரிந்துரையையும் அவன் ஏற்றுக் கொள்வான்.
4) அல்லாஹ்வின் அறிவே முழுமையானது.  அல்லாஹ் எதையும் அவன் நாடிய அளவே படைப்பினங்கள் அறிந்து கொள்ள முடியும். படைப்பினங்களின் அறிவு முழுமையானதல்ல!.
5) அவன் தன் படைப்பினங்களை விட்டும் உயர்ந்தவன், மகத்தானவன். ஏழு வானங்களுக்கு மேல் அவன் அமைத்திருக்கும் "குர்ஸி" ஏழு வானங்களை விடவும் ஏழு பூமிகளை விடவும் மிக விசாலமானது என்று அவன் கூறியதிலிருந்து அவனது மகத்தான ஆற்றலையும் மாபெரும் வல்லமையையும் விளங்கிக் கொள்ளலாம்.
6) வானங்கள் பூமிகளை படைத்தது அவனுக்கு இலகுவானதே. அதில் எவ்வித சிரமமோ அவனுக்கு இல்லை. அவ்வாறே அதில் கோடானக் கோடி படைப்பினங்களை படைத்ததும் அவனுக்கு சிரமமானதல்ல. வானங்களையும் பூமிகளையும் அதிலுள்ள அனைத்து படைப்பினங்களையும் பாதுகாப்பதும் இரட்சிப்பதும் நிர்வகிப்பதும் அவனுக்கு மிக இலகுவானதே. அவன் அத்தகைய மாபெரும் ஆற்றலும் சக்தியும் படைத்தவன்.
"குர்ஸி என்பது அல்லாஹ்வுடைய பாதத்தின் ஸ்தலமாகும்'' என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. (முஸ்தத்ரகுல் ஹாகிம், முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரகுத்னி, முஃஜமுத் தப்ரானி, ஸஹீஹ் இப்னு குஜைமா.)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் இரவில் இவ்வசனத்தை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் இருப்பார். காலை வரை ஷைத்தான் அவரை அணுகமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்பும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவர் சுவனம் நுழைய மரணத்தைத் தவிர வேறெந்த தடையும் இல்லை. (ஸூனனுன் நஸôயீ, அஸ்ஸில்ஸலத்துல் ஸஸீஹா)
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணித்து இருக்கும் அனைத்து தன்மைகளையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் திருக்குர்ஆனின் விளக்கவுரை களாகும். ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிஞர்களால் ஏற்று கொள்ளப்பட்ட உறுதிமிக்க, சரியான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் வந்துள்ள அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள், பண்புகள் அனைத்தும் அவனுக்கு உண்டு என நாம் ஈமான் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உள்ளன. பார்க்க 4:13, 4:80, 4:59, 33:36.
العقيدة الواسطية
 
شيخ الإسلام ابن تيمية
DARUL HUDA

Sunday, May 29, 2011

பைபிள் இறைவனால் அருளப்பட்டதா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப்
Article (Article in Malayalam by: M.M. AKBAR)
ஒரு ஒரு இறைதூதர் அல்லது தீர்க்கதரிசியின் வாழ்வுடன் தொடர்புடைய மூன்று அடிப்படை விஷயங்களை இஸ்லாம் அங்கீகரிக்கிறது.
  1. அவருக்கு ஏற்பட்ட வெளிப்பாடுகளின் தொகுப்பு
  2. அவர் மொழிந்தவையும் அவரின் செயல்பாடுகளும்
  3. அவரைக் குறித்து அவரது சமகால அல்லது பிற்கால மக்கள் பதிவு செய்த குறிப்புகள். 
இதில் முதலில் கூறப்பட்டது மட்டுமே வேதம் என்ற அந்தஸ்தை அடைகிறது. வேத நூல்களில் இறைதூதருக்கு உண்டாகிய வெளிப்பாடுகள் மட்டுமே இடம் பெறும்.
இத்தகைய வெளிப்பாடுகளின் ஒவ்வொரு சொல்லும் முழுக்க முழுக்க இறைவனால் அருளப்பட்டதாக இருக்கும். அதில் கூறப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் தவறுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இறைதூதர் மொழிபவை முற்றிலும் இறை வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது தான் என்றிருப்பினும் இறைதூதரின் மொழிகளும் வேத வரிகளும் நடையில் மாறுபட்டதாக இருக்கும். இறைதூதரின் மொழிகளைப் பொறுத்தவரை அதில் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். இறைதூதரைக் குறித்து பிறர் எழுதியவற்றைப் பொறுத்த வரையில் அது ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு சரியானவை என்று அறிந்த பின்னரே உண்மை என்று கொள்ளப் படும்.
மேற்குறிப்பிடப் பட்டவற்றில் குர்ஆன் முதல் தரத்திலும் ஹதீஸ்கள் இரண்டாம் தரத்திலும் சரித்திர புத்தகங்கள் மூன்றாம் தரத்திலும் வந்து விடுகிறது.
இறை வசனங்கள் தீர்க்கதரிசிகளின் கூற்றுகள் வரலாறுகள் ஆகிய மூன்று அடிப்படையில் இருந்து பல்வேறு மனிதர்களால் தொகுக்கப்பட்ட புத்தகங்களின் தொகுப்பே பைபிள். பைபிளின் முதல் அத்தியாயமான ஆதியாகமத்தில் இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்ட வசனங்களை உதாரணத்திற்குக் கொள்வோம்.
1. வெளிப்பாடுகள்: கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. . நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம்: 12: 1)
2. தீர்க்கதரிசிகளின் கூற்றுகள்: “அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்”. (ஆதியாகமம் 12: 11-13)
3. தொகுப்பாளர்களின் கூற்றுகள்: ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்”. (ஆதியாகமம் 12: 11-13)
உண்மையில் பைபிள் என்பது இறைவசனங்களையும் தீர்க்கதரிசிகளின் கூற்றுக்களையும் ஆதாரமாகக் கொண்டு பிற்காலத்தில் வந்த பல்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலாகும். குர்ஆனின் அடிப்படையில் வேதம் என்பது இறைதூதர்களுக்கு இறைவன் அருளிய வெளிப்பாடுகளை மட்டும் கொண்டதாகும். எனவே பைபிளை ஒரு இறைவேதம் என்று சொல்வதை விட பல புத்தகங்களின் தொகுப்பு என்று சொல்வதே சரியாகும்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes