Friday, May 11, 2012

கடனால் ஏற்படும் இன்னல்கள்

Post image for கடனால் ஏற்படும் இன்னல்கள்
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 2:282
இந்த வசனத்தின்படி கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள். இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி
வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். நூல்: புகாரி
சிறந்த முறையில் கடனை அடைப்பதன் மூலம் நாமும் சிறந்த மனிதனாகிறோம். வசதி குறைந்தவர்களுக்கு கடன் கொடுப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகப் படியாகவே கால அவகாசம் தரலாம். அந்த அவகாச காலத்தில் கடனை செலுத்த முடியாத நிலையேற்பட்டால் வசதி குறைந்தவரின் கடனை தள்ளுபடி செய்து விடுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியை பெற்றுத்தரும். எந்த நிழலும் இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலில் இடம் தருவான்.
யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி
மற்றொரு ஹதீதில்
ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
ஒருவர் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. . கடன் வாங்கிய பிறகு அதனை நிறவேற்ற முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது அவனில் ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். “இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். ‘தாங்கள் கடனை விட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி
கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக!
M.S.கமாலுத்தீன்
 
www.readislam.net

Sunday, November 20, 2011

மணமக்களுக்கான பிரார்த்தனை

Post image for மணமக்களுக்கான பிரார்த்தனை

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ):-
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
… பாரகல்லாஹ_லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்…
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹ_ரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை (சுன்னத்) காரியங்களில் கெட்டது பித்அத்துக்கள் (இஸ்லாம் மார்கத்தில் நபிவழிக்கு மாற்றமாக சேர்க்கப்பட்ட அதிகமாக்கப்பட்ட புதுமையானவைகள்) பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம்: புகாரி.
நடைமுறையில் உள்ள ஸஅல்லிஃப் பைனஹ_மா போன்ற துவாவை ஒதுவது அதற்கு நபி (ஸல்) கூறாத விதத்தில் ஆமீன், ஆமீன் என்று முழுங்குவதைனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த துவா ஒதும் போது அலி, ஃபாத்திமா என்ற பெயர், வரும்போது பெண்ணுக்கு பெண்ணுடைய உறவினர் (தாலி)கருகமணி கட்டுவது போன்றவை ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும். அதை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தில் நிக்காஹ்விலோ, நிக்காஹாவிற்கு பிறகோ தன் மனைவிகளுக்கோ அல்லது தன் மகள் ஃபாத்திமாவுக்கோ (தாலி) கருகமணி கட்டவே இல்லை என்பதும், (தாலி) கருகமணி கட்டுவது அதை கணவன் இறந்த பின் அறுப்பது பின் அந்த பெண்ணை விதவை கோலத்தில் வைத்து அபசகுணமாக கருதி ஒதுக்கி வைப்பது இவையாவும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவை. இவை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.
சீறா புராணத்தை இயற்றிய உமர் புலவர் நபி (ஸல்) அவர்களுக்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பின்னர் பிறந்துள்ளவர். தனது கற்பனையினால் சில கவிதைகளை இயற்றி அதில் இப்படி அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) திருமணத்தைக் கற்பனையாகப் பாடியுள்ளார். இதை செயல்படுத்தும் நமது தமிழ் உறுது முஸ்லிம் மக்கள் நபிவழியை சுன்னத்தை செயல்படுத்தவில்லை என்பதை அறியலாம். ஆகையால் நாம் நபி வழியை கடைபிடித்தால் இம்மையில், மறுமையில் வெற்றி பெறுவோம்.
மணமக்களின் பிரார்த்தனை (துஆ):-
லயின் அதய்தனா ஸாலிஹன் லநகூனன்ன மினஷ் ஷாகிரீன்” (7:189)
எங்களிறைவா! எங்களிருவருக்கும் நீ நல்லதை (சந்ததியை) கொடுத்தால் நிச்சயமாக நாங்களிருவரும் நன்றியுடையவர்களாக இருப்போம். (அல்குர்ஆன் 7:189)
(ஆதிமனிதர் ஆதம் (அலை) அவரது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடன் கேட்ட பிரார்த்தனை)
“ரப்பீஹப்லி மின்லதுன்க துர்ரியய்யதன் தைய்யிபதன் இன்னக்க சமிஉத்துஆ”
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவிமடுப்பவன். (அல்குர்ஆன் 3:38)
(ஜக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
மணமகனின் பிரார்த்தனை (துஆ):-
ரப்பனா ஹப்லலனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யாதினா குர்ரத்த அயுனின் வ ஜஅல்னா லில் முத்தகீன இமாமா”
எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக.(அல்குர்ஆன் 25:74)
(ரஹ்மானின் நல்லடியார்கள் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று பார்க்க 25:67 முதல் 75 வசனங்கள்)
ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன்:
அல்லாஹ_ம்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி”
என்று பரகத்துக்காக துஆ செய்ய வேண்டும்.
பொருள்: இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் (ரலி) ஆதாரம்: ஹாகிம்

www.readislam.net

Sunday, October 16, 2011

உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.
“அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது” (76:15)
“பின்னர் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (62:10)
நபி (ஸல்) அவர்களும் உழைப்பின் முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“தன்கையால் உழைத்து உண்பதை விட வேறு எந்தச் சிறந்த உணவையும் எவரும் உண்ணுவதில்லை” புகாரி
இதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர் விவசாயம் செய்தனர். இன்று சிலர் கைத்தொழில், வியாபாரம், மந்தை மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வியாபாரம், ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். ஸஹாபாக்களும் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர்.
நபி தாவூத் (அலை) கொல்லராகவும் ஆதம் (அலை) விவசாயியாகவும், நூஹ் (அலை) தச்சராகவும், இத்ரீஸ் (அலை) தையல் காரராகவும் மூஸா (அலை) இடையராகவும் இருந்துள்ளனர். – அல் ஹாகிம்
இஸ்லாம் ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாது. சுய மரியாதையுடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் உழைக்குமாறு தூண்டுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்துத் தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கை நீட்டி யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். -புகாரி, முஸ்லிம்
உழைக்காமல் சோம்பேரிகளாக பிறரிடம் கை நீட்டி யாசகம் கேட்பவர்கள் நாளை மறுமையில் முகத்தில் கறுப்புப் புள்ளிகளுடன் வருவார்கள்.
ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா” எனக் கேட்டார்கள்” ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
“நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” திர்மிதி என்று நபி (ஸல்) அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.
உமர் (ரழி) அவர்கள் உழைக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து விட்டோம் எனக் கூறிக்கொண்டு பள்ளிவாசலில் முடங்கிக் கிடந்த சிலரைக் கண்டு அவர்களை நோக்கித் தமது சாட்டையை உயர்த்தி ‘உழைக்காமல் வருமானத்தைத் தேடி வெளியேறிச் செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக் கூடாது” அல்லாஹ்வே எனக்கு ரிஸ்கை வழங்கு’ எனப் பிரார்த்தனை செய்தால் மாத்திரம் போதாது: வானம் தங்கத்தையோ வெள்ளியையோ மழையாகப் பொழியப் போவதில்லை” எனக் கூறினார். மேலும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறும் தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து வருமாறும் பணிக்கின்றது.
அதன் மூலம் இஸ்லாம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை முன்வைக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே சமூகங்களிலுள்ள வசதிபடைத்த செல்வந்தர்கள் அனைவரும் அவரவர் வாழ்நாளில் காணப்படும் சுயதொழியை ஏற்படுத்தி கொடுப்பார்களாயின் எமது நாடு வறுமையற்ற நாடாக மாறுவது சந்தேகம் இல்லை.
ஆகவே, நாமும் இஸ்லாம் கூறியபடி உழைத்து வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போமாக!
ஏ. எம். அஸ்லம்…-

www.readislam.net

தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?

Post image for தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?
இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.
தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.
கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.
“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.
“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.
ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.
இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.
மாறாக அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகிறான்:
 ”மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக தொழுகை உள்ளது”. (அல்குர்ஆன் 4:103)
தொழுகையை அதற்கென குறிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழுதாக வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டதால் நோன்புடன் தொழுகையை ஒப்பிட முடியாது.
இன்னொரு வேறுபாட்டையும் நாம் காண்போம்.
“”மாதவிடாய்க் காலங்களில் நாங்கள் விட்டு விட்ட நோன்புகளை “”களா” செய்யும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டிருந்தோம். ஆனால் அதே காலங்களில் விடுபட்ட தொழுகைகளை “”களா” செய்யும்படி நாங்கள் ஏவப்படவில்லை”. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம்.
“”களா” விஷயத்தில் நோன்பும், தொழுகையும் வெவ்வேறானவை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. நமது இஷ்டத்திற்கு காலம் கடத்திவிட்டு நாம் விரும்புகின்ற எந்த நேரத்திலாவது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இஸ்லாத்தில் அறவே கிடையாது.
இன்னொரு வேறுபாட்டைக் காண்போம்.
நோன்பு என்பது எல்லா மாந்தருக்கும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய கடமை.மாற்று முறை எதுவும் கிடையாது. அதனால் அதை நிறைவேற்ற இயலாத நோயாளிகளாக நோன்பை நோயுற்ற நாட்களில் நோற்க இயலாது போகலாம்.
ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அந்த நிலமை இல்லை. நின்று தொழ முடியவில்லை என்று காரணம் கூறி காலதாமதப் படுத்த முடியாது.
“எனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக (என்னால் தொழ முடியாமலிருப்பதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் “”நின்று தொழு” அதற்கு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு!” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) நூல்கள்: புகாரி, அபூதாவூது, அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதீ, நஸாயீ.
எனவே இயலாமையைக் காரணம் கூறி தொழுகையை களாவாக ஆக்க முடியாது. பயணத்திலிருப்பவன் பட்டினியாகப் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் நோன் புக்குச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் தொழுகையைப் பொறுத்து அந்த அனுமதி கிடையாது.
நான்கு ரகாஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக குறைத்துக் கொள்ளத்தான் அனுமதிக்கின்றான் அல்லாஹ். (அல்குர்ஆன் 4:101)
ஆக நோன்புக்கு இருப்பது போன்ற “களா’ என்பது தொழுகைக்குக் கிடையாது என்பதை நாம் தெளிவாக உணரலாம். மனித வாழ்வில் ஏற்படுகின்ற எந்தப் பிரச்சனைக்காகவும் தொழுகையைப் பிற்படுத்த முடியாது. போர்க்களத்தில் கூட ஒரு பிரிவினர் போர் செய்யும் போது, இன்னொரு பிரிவினர் தொழ வேண்டும். பின்னர் இவர்கள் போர் செய்யும் போது அவர்கள் தொழ வேண்டும் என்பதைத் திருகுர்ஆனின் 4:102 வசனம் குறிப்பிடுகின்றது. “களா’ செய்ய அனுமதி இருக்குமானால் இந்த இக்கட்டான கட்டத்தில் களா செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கும். ஆனால் இந்தக் கட்டத்திலும் “களா’வை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.
பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, ஓர் இடத்தில் நின்று தொழுதால் எதிரிகளால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமென்று அஞ்சினால் அப்போதும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. மாறாக நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழுதாக வேண்டும் என்பதை திருகுர்ஆனின் 2:239 வசனம் குறிப்பிடுகின்றது.
ஒளூ செய்வதற்குத் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை என்றும் காரணம் கூறி களாவாக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் கிடைக்காதவர்கள் “தயம்மம்’ செய்து தொழும்படி திருகுர்ஆனின் 4:43 வசனம் கட்டளை இடுகின்றது.
பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது எப்படியும் குறிப்பிட்ட தொழுகையை நிறைவேற்ற முடியாது போகும் என்றும் கூற முடியாது. லுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் மஃரிபையும், இஷாவையும் ஒரே நேரத்தில் களா இல்லாமலே தொழவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.
ஆக எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. அப்படிக் காலம் கடந்து தொழுவதால், அது அந்தத் தொழுகைக்கு எந்த விதத்திலும் ஈடாக முடியாது.
“எவனுக்கு அஸர் தொழுகை தவறி விட்டதோ அவனது பொருளும், குடும்பமும் தவறிவிட்டது போன்றதாகும்” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இதிலிருந்து தவறியது தவறியதுதான். அதைத் திரும்ப அடைய முடியாது என்று உணரலாம். இவ்வாறு களாவாக்குவது மிகப் பெரும் குற்றம்தான். அல்லாஹ் மிக அதிகமாக வற்புறுத்துகின்ற ஒரு கடமையை வீணடித்தவனாக அவன் ஆகின்றான்.
நீண்ட காலமாகவோ,அல்லது சில வேளைகளோ தொழுகையை விட்டவன் என்ன செய்யவேண்டும்? இதற்குப் பரிகாரமே கிடையாதா? அதையும் அல்லாஹ் அழகாகச் சொல்லித் தருகிறான்.
“அவர்களுக்குப் பின்னால் தொழுகையை பாழ்படுத்தி, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் தோன்றினார்கள். அவர்கள் நரகில் போடப்படுவார்கள். (நடந்து விட்ட இந்த பாவத்துக்காக) திருந்தி மன்னிப்புக் கேட்டு நற்கருமங்களைப் புரிந்தவர்கள் தவிர (மற்றவர்கள் தான் நரகை அடைவர்) இவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 19:59,60)
இப்படித் தொழுகையைப் பாழ்படுத்தியவர்கள் இனிமேல் இப்படிப் பழாக்க மாட்டோம் என்று மனம் திருந்தி செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் அந்த மாபெரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக இயன்ற அளவு நபிலான வணக்கங்களில் ஈடுபடவேண்டும்.
ஆக தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. களாவாக ஆக்கி விட்டு வேறு நேரத்தில் தொழுவது அதற்கு ஈடாக ஆகவும் முடியாது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
“உமர்(ரழி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரழி) ஸல்மான் அல்பார்ஸி(ரழி) போன்ற நபிதோழர்களின் கருத்தும், முஹம்மது இப்னு ஸீரின்(ரஹ்) உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) போன்ற அறிஞர் களின் கருத்தும் இதுதானே” என்று இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: ஃபிக்ஹுஸுன்னா)
ஆரம்ப காலத்தில் களா செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் அவ்வாறு “களா’வாக ஆக்கி இருக்கின்றார்கள். பின்னர் அந்த அனுமதியை அல்லாஹ் ரத்துச் செய்துவிட்டான்.
அதற்கான ஆதாரம் வருமாறு:
“”அகழ்ப் போரின் போது, (அகழ்ப் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிபு ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் தொழவில்லை. இஷா நேரத்தில் வரிசைக் கிரமமாக பாங்கு, இகாமத்துடன் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றினார்கள்” இந்த நிகழ்ச்சி திருகுர்ஆனின் 2:239வது வசனம் இறங்குவதற்கு முன் நடந்ததாகும் என்று அபூஸயீது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஹதீஸின் கருத்து). நூல்கள்:அஹமது, நஸயீ.
“போர்க் காலங்களில் கூட உரிய நேரத்தில் தான் தொழ வேண்டும்” என்ற உத்தரவு வருவதற்கு முன்பு தான் இந்த நிலமை இருந்திருக்கின்றது என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக்குகிறது.
இரண்டே இரண்டு காரணங்களினால் மட்டுமே, உரிய நேரம் தவறிய பிறகும் நிறைவேற்ற வேண்டும்.
“யாரேனும் மறதியின் காரணமாகவோ, அல்லது தூக்கத்தின் காரணமாகவோ, (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, விழித்தவுடன் அதைத் தொழட்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
(இதே கருத்துக் கொண்ட பல ஹதீஸ்கள், புகாரி, முஸ்லிம் அபூதாவூது, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் காணப் படுகின்றன)
ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவுபடுத்துகின்றார்கள். இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் “களா’வாக ஆக்க முடியாது.
“நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் பயணத்தில் செல்லும்போது ஓரிடத்தில் உறங்கி விடுகிறார்கள். உறங்குவதற்கு முன் பிலால் (ரழி) அவர்களை மட்டும் விழித்திருக்கும்படியும், சுபஹு தொழுகைக்கு எழுப்பும்படியும் கூறுகிறார்கள். பிலால்(ரழி) அவர்களும் தன்னை அறியாது உறங்கி விடுகிறார்கள். சூரியன் நன்றாக உதித்த பின்னர் தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று வழக்கம்போல பாங்கு சொல்லி சுன்னத் தொழுது பின்னர் இகாமத் சொல்லி ஜமா அத்துடன் தொழுதிருக்கிறார்கள்” (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரழி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்
(நஸாயீயிலும் இதே கருத்து பதிவு செய்யப் பட்டுள்ளது)
தூக்கம் மறதியின் காரணமாக விட்டுவிட்ட தொழுகைகளைத் தாமதமின்றி விழித்தவுடன், நினைவு வந்தவுடன் தொழுதிட வேண்டும். உரிய நேரத்தில் தொழும்போது எப்படி பாங்கு, இகாமத், சுன்னத்களுடன் தொழ வேண்டுமோ அவ்வாறே அதனை நிறை வேற்றவும் வேண்டும். அந்தத் தொழுகைக் குரிய நேரம் அதுதான் என்றாகி விடும்போது, களா என்ற பிரச்சனையே இல்லை.
ஆக கடந்த காலங்களில் தொழுகைகளை விட்டது மிகப் பெரும் பாவம். இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக பெரும் பாவம். மிகப் பெரும் பாவத்திற்கு எப்படி உள்ளம் உருகி பாவமன்னிப்புக் கோர வேண்டுமோ அவ்வாறு பாவ மன்னிப்புக் கோருவதும், உபரியான வணக்கங்கள் புரிவதும் தான் அதற்குப் பரிகாரம். மேற்கூறிய இரண்டு காரணங்கள் தவிர வேறு காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்தக் கூடாது.
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
அந்நஜாத்

www.readislam.net

Saturday, October 8, 2011

முரீது வியாபாரிகள்

கள்

Post image for முரீது வியாபாரிகள்
பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர். ‘ஆன்மீகப் பாட்டை’ என்பார்கள், ‘ஆத்மீகப் பக்குவம்’ என்பார்கள், ‘அந்தரங்கக் கல்வி’ என்பார்கள், ‘ரகசிய ஞானம்’ என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள். எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.
இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள். இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள். இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தெள்ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் ‘ரகசிய ஞானம்’ என்று ஏமாற்றுகிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் ‘நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே’ எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நீயே சாட்சி!’ என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)
இவ்வளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு – போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள். ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீத்களின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே! எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம். இஸ்லாத்திற்கு விரோதமான குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதையெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும். அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
தமிழ்முஸ்லிம்.காம்

Wednesday, September 21, 2011

தர்ஹா வழிபாடு

Post image for தர்ஹா வழிபாடு
இஸ்லாத்தை அரபு மண்ணில் நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தும் போது, மக்களில் சிலர் முக்கியமான தொரு நபர் இறந்து அவர் அடக்கம் செய்யப்பட்டதும், அவர்கள் இறந்து போன பின்பும் கூட, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என நம்பி அவர்களின் புதைகுழிக்குச் சென்று அவைகளை வழிபடுவதும், அந்த இடத்தில் அறுத்துப் பலியிடுவதும், தங்களின் நேர்ச்சைகளை அவ்விடத்திலேயே நிறைவேற்றுவதுமாய் இருந்தனர். இன்னும் சிலர் இறந்து போனவர்களை உருவமாக சிலை வடிவில் செய்து வணங்கிடவும் செய்தனர்.
வழிபடுவது, நேர்ச்சை செய்வது அறுத்துப் பலியிடுவது, பிரார்த்தனை செய்வது போன்ற
வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டும் என்றிருக்க, அல்லாஹ் அல்லாத இறந்து
போனவர்களின் சமாதி முன்பும், சிலைகள் முன்பும் செய்ய மக்கள் முன் வரக்காரணமாக
அமைந்தது அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்யச் சென்றது தான். இதைத் தடை செய்து விட்டால்,
அவர்கள் வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள் என,
எண்ணியே இஸ்லாம் ஆரம்ப காலத்தில் ஸியாரத் செய்வதைத் தடை செய்து விட்டது. பின்பு
மக்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் அவர்கள், மண்ணறைவாசிகளால் ஏதும் செய்ய இயலாது என்று
நம்பியதும் அவர்களைச் சிறிது காலத்திற்குப் பின்பு ஸியாரத் செய்ய இஸ்லாம்
அனுமதித்தது.
உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது
இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள் என, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்,
இப்னு ஹிப்பான்).
ஸியாரத்தின் நோக்கம்
ஸியாரத் செய்வதால் ஏதேனும் பரக்கத் கிடைக்கும், அங்கே அடக்கமாகி இருப்போரின் ஆசி
கிடைக்கும் என்றெல்லாம் நாம் எண்ண சிறிதும் ஆதாரம் இல்லை. ஸியாரத்தின் நோக்கம்,
மரணச் சிந்தனையும், மறுமை சிந்தனையும் ஏற்பட வேண்டும் என்பது மட்டுமே!
கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப் பற்றை நீக்கும். மறுமையை
நினைவுபடுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயிதுல் குத்ரீ
(ரலி) நூல் : அஹ்மது
என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு
அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது
மரணத்தை நினைவுபடுத்தும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :
அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.
ஸியாரத் செய்யும் முறை
ஸியாரத்திற்கு அனுமதி என்றதும், பத்தி, பழம், தேங்காய், சர்க்கரை, பூ என்று படையல்
பொருட்களைக் கொண்டு செல்வதோ, அங்கு துஆ ஓதிட ஆள் தேடுவதோ, அவர்களுக்கு கூலிப்பணம்
கொடுப்பதோ என்று செயல்படுவது கூடாது. ஏன் எனில், ஸியாரத் செய்வதற்கு நபி (ஸல்)
அவர்கள் கற்றுத் தந்த முறைகளில் அவகைள் ஏதும் இல்லை. கப்ரை ஸியாரத் செய்யச் செல்வோர்,
அங்கே அடக்கமாகி உள்ளவர்களுக்காக ஸலாம் கூற வேண்டும். அவர்களுக்காக துஆச் செய்ய
வேண்டும். ஆனால் அவர்களிடம் துஆக் கேட்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் மண்ணறை பகுதிக்கு வரும் போது,
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹ{ பிகும் லாஹிகூன்
(முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்! நிச்சயமாக நாங்களும்
அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே! என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி). நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன் – வல் முஸ்லிமீன் – வ இன்னா இன்ஷா
அல்லாஹபிகும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா
(முஃமினான – முஸ்லிமான மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக
இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும், எங்களுக்கும்
அல்;லாஹ் விடம் சுக வாழ்வைக் கேட்கிறோம்) என்று கப்ரு பக்கம் வரும் போது கூறும்படி
ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பாளர் : புரைதா (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹமது, இப்னுமாஜா).
மண்ணறைவாசிகளுக்குத் தான் நாம் துஆச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களிடம் நம் தேவைகளை
கூறிப் பிரார்த்திப்பதோ, வழிபாடு செய்வதோ கூடாது. துஆ என்றதும், பாத்திஹா ஓதுவது
என்று எண்ணிவிடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட துஆக்கள் மட்டுமே
சொல்ல வேண்டும்.
காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?
மரணத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் முகமாக முஸ்லிமல்லாதவர்களின் கப்ரைக் காணவும்
செல்லலாம். ஆனால், முஸ்லிம்களின் கப்ரில் சொல்லும் துஅவை சொல்லக் கூடாது.
அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கவும் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் தன் தாயின் கப்ரை ஸியாரத் செய்யும் போது அழுதார்கள்.
சுற்றியுள்ளோர்களும் அழுதார்கள். பின்பு என் தயாருக்காக பாவ மன்னிப்புக் கோர என்
இறைவனிடம் அனுமதி கோரினேன். எனக்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கப்ரைக் காண
அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதிக்கப்பட்டது. எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள்.
நிச்சயமாக அது மரணத்தை நினைவுபடுத்தும் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா
(ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி)
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) நம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்கள் நரக
வாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின், அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும்,
ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல! (அல்குர்ஆன் : 9:113).
ஆண்களுக்கே அனுமதி! பெண்களுக்கு இல்லை!
கப்ருகளை ஸியாரத் செய்ய ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கப்ரு
உள்ள இடத்தில் வர அனுமதி இல்லை.
கப்ருகளை ஸியாரத் செய்யச் செல்லும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி, இப்னு
ஹிப்பான்).
கப்ருகளில் விழாக் கொண்டாடலாமா?
பெரியார்கள் என்ற பெயரில் கப்ருகளை கட்டிடமாக எழுப்பி, அவைகளுக்கு தனி அறை
எழுப்பியும், அந்த கப்ரின் மீது பச்சைத் துணி போர்த்துவதும், கப்ரில் ஓரப் பகுதியில்
எண்ணைத்தூண் வைத்து, அதில் எண்ணெய்யை ஊற்றி, வருவோர் போவோரெல்லாம் அதை கண்ணில்
தடவிக் கொள்வதும், கப்ரின் அருகில் பத்தி வைத்தக் கொளுத்தி வைப்பதும், கப்ரில்
சந்தனத்தை தெளிப்பதும், அங்கே ஒரு கூட்டம் வருவோரை ஏமாற்றி சுரண்ட அமர்ந்திருப்பதும்
இது போன்ற எந்த செயல்பாட்டுக்கும் துளி கூட ஆதாரம் இல்லை.
கப்ருகள் கட்டப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்துள்ளார்கள்.
கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்)
அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம்,
நஸயீ, அபூதாவூத், திர்மிதி.
யூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது கப்ரின் மீது ஒரு
வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்
கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.
யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய
காரணத்தால் அல்லாஹ் சபித்து விட்டான். என, தனது மரணத் தருவாயில் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் : புகாரி.
நீங்கள் எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.
கப்ருகள் கட்டிடமாக இல்லையெனில், சிறிது காலத்திலேயே கப்ரு உள்ள இடமாக அது இருக்காது.
மேலும் யாருடைய கப்ரு என அறிய முடியாமல் போய் விடும். இதனால் அனுமதிக்கப்படாத செயல்
முறைகள் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆனால் கப்ருகள் கட்டிடமாக கட்டப்பட்டாலோ எல்லா
அநாச்சாரங்களும் வந்து விடும். இதனால் தான் கட்டிடமாக கட்டடப்படும் கப்ருகளை
தரைமட்டமாக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
உயரமான எந்த கப்ரையும், (இடித்து) சமப்படுத்தாமல் விட்டு விடாதே! எனக் கூறி, நபி (ஸல்)
அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன், என அலீ (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹய்யாஜீல் அஹ்தீ (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ,
அபூதாவூத், அஹ்மது.
தர்காக்களுக்குச் செல்லலாமா?
தர்கா என்ற பெயரில் கப்ருகளை கட்டி வைத்து உள்ளனர். அதை ஸியாரத் செய்யச் செல்லக்
கூடாது. இங்கே செல்வோரிடம் மரணச் சிந்தனை, ஸியாரத்தின் நோக்கம் என்பது இல்லாமல்,
பரக்கத்தே என்பதாக உள்ளது.
காஃபிர்களின் கப்ரையும் காணலாம் என்பதில் இருந்தே ஸியாரத்தின் நோக்கம் பரக்கத் அல்ல
என்பது தெளிவாகும். நோக்கம் சிதைந்து விடுவதாலும், கப்ருகளை கட்டக் கூடாது என்ற
ஹதீஸுக்கு மாற்றமாக கட்டிடமாக கட்டி வைத்துள்ளதாலும், விழாக்கள் நடத்தும் இடமாக
கப்ருகள் இருக்கக் கூடாது என்பதற்கு மாற்றமாக விழா நடக்கும் இடமாக உள்ளதாலும் மேலும்
பல அனாச்சாரங்கள் நடைபெற காரணமாக உள்ளதாலுமே தர்காக்களுக்குச் செல்லக் கூடாது.
ஸியாரத் செய்யச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குடன் தர்காக்களுக்கு
சென்றால் தவறா? என்ற கேள்வி எழவே செய்யும்!
தர்கா என்பது மட்டுமல்ல, எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ஒரு முஸ்லிம் கையால் தடுக்க
வேண்டும் முடியாது என்றால் மனதளவில் வெறுத்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
தர்காக்களில் தவறு நடக்கிறது. குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாக கட்டிடம்
கட்டப்பட்டுள்ளது. பாத்திஹாக்கள் ஓதப்படுகிறது. வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி பல
அநாச்சாரங்கள் நடந்தும் தடுக்க முடியாத முஸ்லிம் அங்கு போகாமல் இருப்பதே சரியாகும்.
உங்களில் எவரேனும் கூடாத காரியங்கள் செய்யப்படுவதை கண்டால், அவர் தன் கையால் அதை
மாற்றட்டும். இயலவில்லை எனில், நாவால் (கூறித் தடுக்கட்டும்), இயலவில்லை எனில், தன்
இதயத்தால் (வெறுக்கட்டும்) இதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஸஈத் (ரலி) நூல் : முஸ்லிம்.
எனவே, ஸியாரத் செய்ய விரும்பும் ஆண்கள், நபி (ஸல்) அவர்கள் கூறித் தந்த ஒழுங்குப்படி
பொது மண்ணறைக்கு மட்டுமே செல்ல வேண்டும். தர்காக்களுக்குச் செல்லக் கூடாது.
பெண்களுக்குச் ஸியாரத் செய்ய அனுமதி இல்லை.
நமது கேள்வியும் குர்ஆனின் பதிலும்
அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாமா?
சான்று :
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப்
பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால்
பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே
உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள்
அறியமாட்டார்கள். உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை
நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன -
மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (16:20-22)
சான்று : 2
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப்
போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப்
பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)
இறந்தவர்கள் (கப்ருகளில் உள்ளவர்கள்) செவியேற்க முடியுமா?
சான்று :
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக
அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக்
கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. (35:22)
அல்லாஹ் அல்லாதவரை அழைப்பவர் யார்?
சான்று : 1
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர்
பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில்
ஒருவராகிவிடவீர்.(10:106)
சான்று : 2
கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை
அழை;ப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
(46:05)
சான்று : 3
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக்
கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு)
இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (18:102)
அல்லாஹ் அல்லாதவர் உதவி செய்ய முடியுமா?
சான்று :
அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள எண்ணிக்கொண்டிருப்பவர்களை
அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது
திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). (17:56)
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக
அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம்
ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து ஒரு
பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக்
கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பவஹீனர்களே. (22:73)
அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்ய முடியுமா?
சான்று :
அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசபவர்களாக எடுத்துக்
கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ”அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல்
இருந்த போதிலுமா?”" (என்று.) ”பரிந்து பேசதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது;
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள்
மீட்டப்படுவீர்கள்”" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (39:43-44)
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காதவர் யார்?
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு
நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
(43:36)
இறைவனிடமே உங்களது தேவைகளைக் கேளுங்கள் :
”என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக்
கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் -
நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க
மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்”" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
(39:53)

WWW.READISLAM.NET

Thursday, September 8, 2011

ஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி … !! ??. ஏன்? ஏன்?.

இன்றைய உலகத்திற்கு தேவை இஸ்லாம்! இஸ்லாம்! இஸ்லாம் என முழங்குகிறார். மோகன கிருஷ்ண‌ன்.
இங்கே இருக்குது சமத்துவம்...!


அன்புச் சகோதர, சகோதரிகளே...!

20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

தொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங்கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.

அதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர். அவர்கள்தான் இந்து மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள்.

தலித்துகள் இந்தியாவையே ஆளத் தகுதிபெறும் அளவுக்கு பெரும்பான்மையினர். ஆனால் அவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது.

எப்படியெனில், இன்று அவர்கள் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள்.

மேல்சாதியினர் வசிக்கும் இடங்கள் வழியாக தலித்கள் செல்லும்போது செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். சில இடங்களில் செல்லவே முடியாது.

தாழ்த்தப்பட்ட ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிணத்தை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இந்த மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக கொண்டுசெல்லவே முடியாது. பல மைல் தூரங்கள் தேவையில்லாமல் சுற்றிச் சென்றுதான் கொண்டு செல்லவேண்டும்.

ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று மேல்சாதிக் காரனின் வீட்டில் நுழையலாம்... அங்குள்ள பாத்திரத்தில் வாய் வைக்கலாம்... அவர்களின் தெரு வழியாக இஷ்டத்துக்கு வலம் வரலாம்... ஆனால், இதே காரியங்களை இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவன் செய்தால் இவர்களின் வீடும், பாத்திரமும் உடலும் தீட்டுப்பட்டுவிடும்...! அந்தோ பரிதாபம்...!!!

மேல்சாதியினர் என்று கூறிக்கொள்வோரின் வீட்டுப் பெண்ணையோ அல்லது ஆணையோ இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ நேசித்துவிட்டாலே போதும்...

அவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சக மனிதர்கள் முன் கேவலப்படுத்தப்படுவார்கள். ஏன்...? அவர்களுடைய உயிர் கூட பறிக்கப்பட்டுவிடும். இது நமது இந்தியாவில் இன்றும் சர்வ சாதாரணமாக நடந்து வருபவை.

அது மட்டுமல்ல! தாழ்த்தப்பட்ட இந்துப் பெண் ஒருத்தி மேல்சாதிக்காரனால் மானபங்கப் படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு சாட்சியே இல்லாமல் ஆக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.


பரிதாபம்... பரிதாபம்...

இந்திய அரசியல் சாசனச் சட்டத்தைத் தொகுத்துத்தந்த பெருமை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் டாக்டர் அம்பேத்கரைச் சாரும். ஆனால் அவரது சமுதாயமோ திக்குத் தெரியாத காட்டில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம்... இந்த மக்கள் அண்ணல் அம்பேத்கர் மீது உயிரையே வைத்திருந்தபோதிலும் அவர் காட்டிய பாதையில் அடியெடுத்துச் செல்லாததுதான்!

கல்வி கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!! என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இந்த மக்கள் மற்றவர்களைப் போல கல்வி கற்க இயலவில்லை. காரணம் பொருளாதாரம். தலைமுறை தலைமுறையாக ஆளும் வர்க்கத்திற்கு கூலி வேலை செய்வதும், கிடைப்பதை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் என்று செலவழித்துவிட்டு கடனாளியாகி, மீண்டும் அவர்களிடமே கையேந்திக் கொண்டு நிற்பதும்தான்!

பல்லாண்டு காலங்களாக பல தலைவர்களும் முயற்சி செய்தபோதிலும் இந்தக் கொடுமைகளுக்கு இன்றும் தீர்வு இல்லை.

இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்... அக்கிரமம்... இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது.

அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது...? மேலவலவு, கொடியங்குளம், வாசாத்தி போன்ற கிராமங்களின் வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை கிராமங்களோ...!

ஜாதிகள் இல்லையடி பாப்பா...' இது பிஞ்சுக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் பாட்டு. ஆனால், இதைக் கற்பதற்கு பள்ளியில் சேர வேண்டுமானால் தனது ஜாதியைச் சொல்லித்தான் சேர வேண்டியதிருக்கிறது.

முன்னேறுவதற்கு முயலும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதில் கிடைத்த பலன் பூஜ்யமே!

பல தலைவர்கள் வந்தார்கள்... சென்றார்கள்...

அவர்களால் தங்கள் சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கவும், சில சலுகைகளைப் பெற்றுத்தரவும் முடிந்ததே தவிர, அம்மக்கள் சக மனிதர்களுடன் சரி சமமாகப் பழகும் உரிமையை, தலைமைத்துவத்தை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, கொடுக்கவும் முடியாது.


அரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்துமே வீணாகியதுதான் மிச்சம்.

ஏனென்றால், இது நாட்டின் கொள்கை அல்ல! அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை. அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.

`உதாரணமாக, தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை.

மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம்.

விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை.

ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை. ஆகா... என்னே சமத்துவம்...!!!

இந்த இழிவுகளிலிருந்தெல்லாம் நீங்கி, சமத்துவம் பெறலாம் என்று கிறிஸ்துவ மதத்தில் இணைவோரும் கூட அங்கே தலித் கிறிஸ்துவன் என்ற அடையாளத்துடனேயே வாழவேண்டியுள்ளது.


எல்லாம் சரிதான்! சமத்துவத்துக்கு வேறு என்னதான் வழி என்று நீங்கள் கேட்கிறீர்களா...? திருச்சி பெல் தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றும் போது, எங்கு சென்றாலும் உங்களை இந்த ஜாதிப்பாகுபாடு விடாது!

இந்த இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றுதான் நன்மருந்து என்று அவர் முழங்கினார்.


கொடிக்கால்பாளையத்தில், தாழ்த்தப்பட்டவராக இருந்தவர் கொடிக்கால் செல்லப்பா.

இவர் ஒரு கம்யூனிஸ்ட்வாதியாக இருந்தபோதிலும்,

தான் இருக்கும் மதத்திலிருந்துகொண்டு ஒருபோதும் ஜாதி இழிவை விட்டு அகல இயலாது என்ற நிலையில்

இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் இன்று தானும் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்து,

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்.


அரசியல்வாதியாகவும், பிரபல பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் இருந்த அடியார் என்பவர், இஸ்லாம் தவிர்த்து வேறு எதுவாலும், எவராலும் தம் சமுதாயத்தை உயர்வடையச் செய்ய முடியாது என்கிற நிலையில்,

நான் காதலிக்கும் இஸ்லாம் என்ற புத்தகத்தை தன் சமுதாயத்திற்குத் தந்த கையோடு தன் வாழ்வையும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், இங்குள்ள ஜாதிவெறி போல நிற வெறியும், இனவெறியும் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என்ற வேற்றுமையால் தாங்க முடியாத பாதிப்பிற்குள்ளான கறுப்பர் இன கிறிஸ்துவராக இருந்த மால்கம் எக்ஸ், குத்துச்சண்டையில் உலக ஹெவிவெய்ட் சாம்பியனாக வலம் வந்தும் நிற இழிவால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட க்ளேசியஸ் கிளே என்ற முஹம்மத் அலி க்ளேயும் இஸ்லாம் ஒன்றுதான் ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடற்ற மார்க்கம் என்று உணர்ந்துகொண்டு தங்களை சமத்துவ இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவையெல்லாம், வேறு மதங்களிரிருந்து சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களின் நிலை. சரி, இந்த ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடுகளைக் களைய இஸ்லாம் என்னதான் கூறுகிறது என்று அறிய ஆவலா? உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டியாக உள்ள திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்று பாருங்கள்:

ஓ மனிதர்களே...! உங்கள் இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் உங்களனைவரையும் ஒரே ஆத்மாவிரிருந்தே படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (உலகில்) பரவச்செய்தான். ஆகவே இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்..... (திருக்குர்ஆன் 4:1)

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது பிறப்பினால் ஏற்படுவதல்ல, அவரவர் செய்யும் நல்ல தீய செயல்களைக் கொண்டே ஒருவன் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்று பிரிக்கப்படுவான் என்று உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

மனிதர்களே...! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிரிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) நிச்சயமாக உங்களில் எவர் (தம் செயல்கள் விஷயத்தில் இறைவனுக்கு) மிகவும் பயபக்தி உடையவரோ அவரே அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் கண்ணியமானவர். (திருக்குர்ஆன் 49:13)

அது மட்டுமல்ல! ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து, எந்தத் தேவையுமற்ற ஒரே இறைவனை வணங்கி வழிபட இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்

(இறைவனின் தூதரே...!) நீர் கூறும்...! இறைவன் ஒருவனே...!
இறைவன் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமற்றவன்...!
அவன் (யாரையும்) பெறவும் இல்லை....!
(எவராலும்) பெறப்படவும் இல்லை...!
அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை...!!!


(திருக்குர்ஆன் 112:1 4) .

இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல!

சில தலைமுறைகளுக்கு முன் இதுபோன்ற ஜாதி இழிவுகளிரிருந்து விடுதலை பெற முடிவு செய்து அதனடிப்படையில் தங்களை மாற்றிக்கொண்டவர்கள் தான்


இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர். ஒரு சிறிய அளவு முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள விஞ்ஞான உண்மைகள், அறிவுப்பூர்வமான தத்துவங்கள்... இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் கவரப்பட்டு சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.

அது மட்டுமல்ல!

இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழிபாடுகளான தொழுகை, ஹஜ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்... ஒரு நாளைக்கு 5 வேளை கூட்டுத் தொழுகை நடத்தப்படுகிறது.

நேற்றுவரை வேறு வேறு ஜாதிகளில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் சிறிதும் நெருங்காமல் வாழ்ந்துவந்த மக்கள் இன்று முஸ்லிம்களாக ஓரணியில் நின்று தோளோடு தோள் நின்று தொழும் காட்சியை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் சற்று முந்திவந்து, உயர்ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் தாமதமாக வந்தால், பிந்தி வந்தவன் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும்.

முந்தி வந்த சகோதரனின் கால் பிந்தியவனின் தலைமீது படும். நாட்டின் பிரதமராக இருந்தாலும், அவர் பிந்தி வந்தால் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். நான் பிரதமரல்லவா என்று முன் வரிசையில் மற்றவரை ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது.


அதுபோல, வருடந்தோறும் சவூதி அரேபியாவில் புனித மக்கா நகரத்தில் உள்ள இறை ஆலயமான கஃபாவில் ஹஜ் என்ற வணக்கம் நடைபெறுகிறது.

பல நாடுகளைச் சார்ந்த, பல மொழி, இன, நிற வேறுபாடுகளைக் கொண்ட சுமார் 35 லட்சம் பேர் ஒரே உடையில், ஒரே இடத்தில் ஒன்று கூடும் அந்த நாளில் அனைவரும் எந்த வித்தியாசமான குறுகிய எண்ணமும் இன்றி, இரண்டறக் கலந்து வலம் வரும் அந்தக் காட்சியைப் பார்ப்போர், இஸ்லாமிய மார்க்கத்தில் இந்தக் குறுகிய வேறுபாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்று சத்தியமிட்டுக் கூறுவர்.


1430 வருடங்களுக்கு முன்பு, இன்று நாம் காணும் இந்த வேறுபாடுகளை விட மோசமான பாகுபாடுகள் நிலவி வந்தன.

இப்போதாவது இந்த தலித் மக்கள் தங்களது சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஓரளவாவது வாய்ப்புள்ளது.

ஆனால் அன்றைய அரபு சமுதாயத்தில் கறுப்பு இன மக்கள் அடிமைகளாக தனது முழு வாழ்வையும் இழந்து, மாட்டையும்விட கேவலமாக நடத்தப்பட்ட காலம் அது!

அந்தப் பொழுதில்தான் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (முஹம்மது நபி) அவர்கள் மூலமாக உலகப் பொதுமறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு, அதனடிப்படையில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியையே ஏற்படுத்தியது. அந்தப் புரட்சி இரண்டு விதமாக நடத்திக் காட்டப்பட்டது.

ஒன்று : இன்று கம்யூனிஸவாதிகளால் தோழர்களே! என்று அழைக்கப்படும் அந்தப் பதம் 1430 வருடங்களுக்கு முன்பே இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களால் மன உவப்புடன் செயல்படுத்திக் காட்டப்பட்டது.

அடுத்தது : ஒரு காலத்தில் பல புரட்சிகளையும், புதுமைகளையும், தத்துவங்களையும் பேச்சிலும், எழுத்திலும் காட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிய பல தலைவர்களுக்கு இன்று பொன்னாலும், வெள்ளி மற்றும் வெண்கலத்தாலும், பாறையாலும் சிலை வடித்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


ஆனால், தான் சொன்னதைச் செய்து காட்டியவர்... செய்ததை மட்டுமே சொன்ன ஒரே தலைவர்... ஒரு அறிவுப்பூர்வமான மார்க்கத்தை உலக மக்களுக்கு விளக்கிக்காட்ட வந்த உத்தமர்... அப்பேற்பட்ட நபிகள் நாயகம் அவர்கள், தான் வரும்போது மக்கள் தனக்காக எழுந்து நிற்பதையே தடுத்து நிறுத்திக் காட்டியவர்... காலில் விழுவதைக் கண்டித்தவர்...

தற்போது மொத்த உலகில் நான்கில் ஒருவரால் பின்பற்றப்படும் நபிகள் நாயகம் அவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு சிறு சிலை கூட கிடையாது என்பது மாபெரும் புரட்சிதானே...?

(சில வருடங்களுக்கு முன்னர் உலகின் பல உயர்ந்த தலைவர்களை மதிக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிலைகளின் வரிசையில் நபிகள் நாயகம் அவர்களுக்கும் ஒரு சிலை வைத்தனர்.

பொதுவாகவே, இது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் நபிகள் நாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முஸ்லிம் சமுதாயம், நபிகள் நாயகத்துக்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றச் சொல்லி உலகம் முழுவதும் கொந்தளித்தது.

முடிவில் அந்தச் சிலையும் அகற்றப்பட்டது. இந்தப் புரட்சியை எங்காவது காட்ட முடியுமா?

வெறும் பேச்சளவில் மட்டும் புரட்சி பேசாமல் செயல்படுத்தியும் காட்டினார்கள் நபிகள் நாயகம் அவர்கள்!

அனைத்து மக்களையும் தொழுகைக்கு அழைக்கும் அழைப்போசையை (பாங்கு) முழங்கிட அன்றை அரபு சமுதாயத்திலேயே மகா மட்டமாகக் கருதப்பட்ட கறுப்பர் இன அடிமையான பிலால் என்ற ஒரு தோழரையே நபிகள் நாயகம் அவர்கள் நியமித்தார்கள்.

இதன் காரணமாக, அதுவரை அவரை அடிமையாகப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மக்கள் அன்று முதல் அவரை தலைவர் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.

இதுதான் இஸ்லாம் செயல்படுத்திக் காட்டும் சமத்துவம்.

எனவே,

உயர்வுக்கு வழிவகுக்கும் சாதி, இன, நிற, மொழி மற்றும் இன்னபிற வேறுபாடுகள், மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்...!

சமத்துவம் காணுங்கள்...!!

வெற்றி பெருங்கள்...!!!

படைத்த இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக...!



நன்றி: சமூக நல்லிணக்க மையம் (CESH)

THANKS TO ARTICLE SOURCE: http://vapuchi.wordpress.com/ வலைப்பதிவாளர் - அப்துல் கையூம்

***********


திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.

பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.

திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.” -- சுஜாதா.

-(தினமணி ரம்ஜான் மலர் – 2003) 
 
Source:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes