கள்
பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர். ‘ஆன்மீகப் பாட்டை’ என்பார்கள், ‘ஆத்மீகப் பக்குவம்’ என்பார்கள், ‘அந்தரங்கக் கல்வி’ என்பார்கள், ‘ரகசிய ஞானம்’ என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள். எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.
இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள். இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள். இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தெள்ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் ‘ரகசிய ஞானம்’ என்று ஏமாற்றுகிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் ‘நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே’ எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நீயே சாட்சி!’ என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)
இவ்வளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு – போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள். ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீத்களின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே! எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம். இஸ்லாத்திற்கு விரோதமான குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதையெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும். அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
தமிழ்முஸ்லிம்.காம்
0 comments:
Post a Comment