படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து பணத்தின் மீதும், பதவியின் மீதும், கல்வியின் மீதும், தம் அறிவின் மீதும், தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும், சொத்துகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறான் மனிதன். தன் பிடரி நரம்பினும் அண்மையிலுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்தவனாக நன்றி கெட்டவனாக மனிதன் வாழ்வதில் இன்பம் காணுகிறான்.
தன்கையில் இலட்ச இலட்சமாக பணம் உள்ளவன் தன்னால் தான் விரும்பியதை செய்ய இயலும் என இறுமாப்புக் கொள்கிறான். மேலும் பணமில்லாத தன் உடன் பிறந்தவர்களையே ஏளனமாக நோக்குகிறான். அவனுடைய ஏழ்மையின் காரணமாக அவன் வாழும் நெறியான வாழ்க்கை மீதே வீண் பழி சுமத்தவும் அஞ்சுவதில்லை. காரணம் தன்னிடம் உள்ள பணம் தன்னைக் காப்பாற்றும் மிகப்பெரிய சக்தியாக அவன் எண்ணுவதுதான்.
அடுத்து பதவியின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கை தன்னுடைய பதவியை எதனையும் சாதிக்கக்கூடிய, நினைத்ததை முடிக்கக்கூடிய அதிகாரம் படைத்ததாகக் கருதி செயல்படுகிறான். மேலும் கல்வியின் மீது கொண்ட நம்பிக்கையானது கல்வி கற்காதவர்களையும் அறிவற்றவர்களாக தகுதியில்லாதவர்களாக எண்ணும் அளவுக்கு ‘அறிவின் ஆணவம்’ போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறாக வியாபரத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் மனிதனை இறை நம்பிக்கையற்றவனாக ஆக்குகின்றது. தன் வியாபாரம் எக்காலத்துக்கும் கைகொடுக்கும், மங்காத மறையாத செல்வம் அதன் மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கின்றான்.
சொத்துக்களின் மீதும் மனிதன் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவனாக இருக்கின்றான். தம்முடைய இந்தச் சொத்து ஐந்தாறு தலைமுறைகளுக்குத் தேறும், எவரும் தன்னை அசைக்கக் கூட இயலாது என எண்ணுகிறான். இஸ்லாம் மனிதனுக்குள்ள பணத்தேவையையும், அதை ஈட்டுவதின் வழி முறைகளையும், கல்வியின் அவசியத்தையும், அறிவின் மூலம் ஏற்படுகின்ற சிந்தனை ஊற்றையும் கொடுக்கல் வாங்கல் முதலான வியாபரங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும், சொத்துக்களின் பங்கீடு முறை பற்றியும் தெளிவாக எடுத்து கூறுகின்றது.
இல்லறத்தின் மூலம் நல்லறங்களைச் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. காவி உடை தரித்து கமண்டலம் ஏந்தி காட்டுக்குச் சென்று தவம் செய்து ஞானி எனப்பெயர் பெறுவதே சிறந்ததது என்று இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. எந்த காரியத்திலும், எந்தச் செயலிலும் இறை நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையே இஸ்லாம் மானிட இனத்துக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில்
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:1-9)
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது – நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:1-2)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள்; நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள்! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் மேலும் உங்கள் அறிவினை விரிவாக்கக் கூடிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் இறை நம்பிக்கையுடன் அறிவைப் பெற முயலுங்கள்.
வியாபாரம் செய்யுங்கள். மாட மாளிகைகள் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் எப்போதும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ்ந்து வாருங்கள். அல்லாஹ் நம்மனைவோர்க்கும் தனது பரந்து பட்ட அருளை இடைவிடாது அளிப்பானாக! (ஆமீன்) புலவர் செ ஜஃபர் அலீ
Source www.readislam.net
0 comments:
Post a Comment