Friday, June 17, 2011

உண்மை முஸ்லிம்களாவது எப்போது?

    இறை மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் (பரம்பரை) முஸ்லிம்களே! நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா? உங்கள் வாழ்க்கைக்கும் இஸ்லாத்திற்கும் என்னத் தொடர்பு இருக்கிறது.  உங்கள் வாழ்க்கைக்கும், இஸ்லாத்திற்கும் எட்டிப் பிடிக்க முடியாத இடைவெளி நீண்டுக் கொண்டே செல்கிறது. ஏன்?
ஒரு முஸ்லிம் ஊரில்-ஒரு குடும்பத்தில் பிறந்து-வளர்ந்து-வாழ்ந்து வருவதால் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற பெயரை மட்டும் உங்களோடு வலிந்து ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்னத் தொடர்பு இருக்கிறது?
ஒரு முஸ்லிம் ஊரில் அல்லது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வருவதால் அங்கு கண்டும் கேட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பவைகள் அனைத்தும் இஸ்லாம் என்பதே உங்கள் கண் மூடித்தனமான நம்பிக்கை ஏனென்றால் நீங்கள் பரம்பரை முஸ்லிம்கள்! உங்கள் தாய் தந்தையர்கள் முஸ்லிம்கள்! உங்கள் பாட்டன் முப்பாட்டன் என்று அனைவரும் முஸ்லிம்கள்! அந்தத் தொடரில் நீங்களும் முஸ்லிம்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? (ஒன்றுமில்லை எடுத்துரைக்க இன்னும் வெட்கமா?)
இஸ்லாத்திற்கு இழுக்கைத் தேடித்தந்துக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர்தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! ஆழ்ந்து சிந்தியுங்கள்! சிற்றூர்களில் நிறுவப்பட்டுள்ள சின்ன சங்கங்கள் முதல், பெரும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஈறாக எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படையில் அல்லது ஏதோ ஒரு இலட்சியத்தை அடையும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடியும். ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்ட ஒருவர் ஒரு இயக்கத்தில் இணைகிறார். இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் இவ்வியக்கவாதிகள் முதல் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்ற உறுதி மொழியுடன் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, இயக்கத்தில் இணைகிறார். சில காலம் சென்ற பின் இயக்க விதிகள் மீறப்பட்டிருப்பதை இதமாய் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும் அவர் இதை ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை. அலட்சியம் செய்கிறார். மற்றொரு முறையும் இயக்க கொள்கைக்கு முரண்படும் விதத்தில் செயல்பட்டார் என்று ஆதாரப்பூர்வமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் கண்டிக்கவும் படுகிறார். கடுமையாக எச்சரிக்கப் படுகிறார். அது மட்டுமா? அடுத்தமுறை இதுப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் இயக்கத்தை விட்டே நீக்கப் படுவீர்” என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பும் விடப்படுகிறது. இதனுடைய பாதிப்பு சில காலம் தான். ‘பழைய குருடி கதவை திறடி’ என்பது போல் மீண்டும் இயக்கத்திற்கு முற்றிலும் முரண்பட்ட கொள்கைகளிலும் செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாய் பிடிப்படுகிறார். இயக்கத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்.
இப்போது சிந்தியுங்கள்!
மனித சிந்தனையில் உருவாகிய இயக்கம்! அதற்கு கொள்கை, செயல்பாடுகள், விதிகள் அவைகளை மீறினால் முதல் முறையாக இருந்தால் வாய்மொழி எச்சரிக்கை! இரண்டாம் முறை எழுத்து மூலமான எச்சரிக்கைக்கு உறுதியாக இயக்கத்தை விட்டே வெளியேற்றப்படல்.
இவைகளை நல்ல முறையில் அறிந்து வைத்துள்ள பெயர் தாங்கி முஸ்லிம்களே இப்போது சிந்தியுங்கள்!! இறையருளிய முஸ்லிம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் மார்க்கம்; இஸ்லாத்தின் மூலக் கொள்கை என்ன? என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? (இல்லை என்று சொல்ல இன்னும் வெட்கமா?) என்ன! இஸ்லாத்திற்கு கொள்கை உண்டா? இது இஸ்லாத்திற்கு பாரம்பரிய சொந்தம் கொண்டாடி வரும் பரம்பரை முஸ்லிம்களை திடுக்கிட வைக்கிறது. காரணம்: இஸ்லாம் இறையருளிய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்பதை இன்னும் இன்றைய பெரும்பான்மையான முஸ்லிம்கள் உணரவில்லை.
இஸ்லாம் அசைக்க முடியாத உறுதியான தெளிவான கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை நெறி. மனித சமுதாயம் முழுமைக்கும் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறை மார்க்கம் என்ற விஷயம் பரம்பரை முஸ்லிம்களை திடுக்கிட செய்வதில் வியப்பில்லை!
ஆம்! இறை மார்க்கம் இஸ்லாம் உறுதியான கொள்கை அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்பதே மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத பேருண்மை! இது சுயநலமிகளால் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது. இன்று, இஸ்லாத்திற்கு பாரம்பரிய சொந்தம் கொண்டாட வரும் பரம்பரை முஸ்லிம்களுக்கு அதை எடுத்துக் காட்டினால் அவர்கள் மிரளுகிறார்கள். அல்லது மிரள வைக்கப்படுகிறார்கள் அது மட்டுமா? பரம்பரை முஸ்லிம்கள் மார்க்கத்தின் பெயரால் மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்கள் இல்லாததின் உண்மைக் கொள்கைகளை இன்றளவும் உணரவிடாமல் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் உண்மைக் கொள்கைகள் இன்னும் எத்தி வைக்கப்படாமலும் இருக்கிறது.
பரம்பரை முஸ்லிம்கள் மார்க்கத்தை குறிப்பிட்ட ஒரு சாரரும்  (மெளலவி என்ற வர்க்கத்திற்கு) தாரை வார்த்து விட்டார்கள். மார்க்க விஷயங்களுக்காக  பரம்பரை முஸ்லிம்கள் அந்த ஒருக் குறிப்பிட்ட சாரரையே முற்றிலும் நம்பியிருக்கிறார்கள். இன்றளவும் இதே இழிந்த நிலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தோ பரிதாபம் மார்க்கத்தின் கொள்கைகள் மறைக்கப்பட்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் மார்க்க முலாமில் மின்ன வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாந்து கொண்டும் இருக்கிறார்கள்.
உலகில் மனித சிந்தனையில் உருவாகிய இயக்கங்களில் ஒருவர் இணையும் போது, விண்ணப்பப் படிவங்களில் கொள்கைகள், விதிகள் செயல்பாடுகளை ஏற்பதாய் ஒப்புக் கொண்டு, உறுதியளித்து ஒப்பமிட்டுக் கொடுப்பது மனித நியதி. இப்போது அல்லாஹ்(ஜல்) மனித சமுதாயத்திடம் அவன் அருளிய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்து ஒப்புதல் பெற்றுள்ளது நமக்கு வியப்பளிக்கும் பேருண்மை ஆகும். திருக்குர்ஆன் வசனம் (7:172) அதற்கு நபி(ஸல்) கூறிய விளக்கத்தையும் பாரீர். மனித சமுதாயத்தன் மூலவர் நபி ஆதம்(அலை) அவர்களைப் படைத்த பின். ஆதம்(அலை) அவர்களது முதுகிலிருந்து அவர்களின் எல்லா சந்ததியினரையும் (அணுரூபத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்தி, நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று அவற்றை நோக்கி கேட்டான். ஆம் நீ எங்கள் இரட்சகன் தாம் என்று அவர்கள் மறு மொழியளித்தனர். அப்பொழுது இறைவன் அவர்களை நோக்கி கூறியதாவது.
எங்களுக்கு இச்செய்தி பற்றி எதுவும் தெரியாது என மறுமை நாளில் நீங்கள் கூறாமலிருப்பதற்காக, உங்களின் ஆதமையும், வானங்களையும் பூமியையும் நான் சாட்சிகளாக ஆக்குகின்றேன். நீங்கள் அறியவேண்டிதென்னவெனில், என்னைத் தவிர்த்து வணக்கத்திற்க்குரியவன் யாருமில்லை; எனக்கு இணை வைக்காதீர்கள்; நான் வேதங்களை வழங்கி, எனது தூதர்களை உங்கள் பால் உலகிற்கு அனுப்புவேன். அவர்கள் இப்பொழுது நடைபெற்ற இவ்வுடன்படிக்கையை உங்களுக்க ஞாபக மூட்டுவார்கள். என அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்னத் இமாம் அஹ்மத்)
நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி நாள் வரை தோன்றப்போகும் மக்கள் அனைவரிடமும் அல்லாஹ்(ஜல்) பெற்றுக் கொண்ட உறுதியான உடன்படிக்கையை மேலே சுட்டிக் காட்டியுள்ளோம். இப்போது சிந்தியுங்கள்”
அல்லாஹ்(ஜல்)வை மட்டுமே ஒரே இறைவனாய் ஏற்று, அவனை மட்டுமே வணங்குவோம். அதாவது ஏகத்துவ இறை நெறியே எங்கள் கொள்கை  என்று அல்லாஹ்(ஜல்)விடம் உறுதியளித்து ஒப்புதலும் அளித்திருக்கிறோம். இதை மனித சமுதாயத்திற்கு நினைவு, படுத்தவே இறைத் தூதர்களையும், இறை வேதங்களையும் அல்லாஹ்(ஜல்) அருளிக் கொண்டே இருந்தான். இஸ்லாமிய வாழ்க்கை நெறியை கடைப் பிடிப்பதன் மூலம் மட்டுமே மனித சமுதாயம் அல்லாஹ்(ஜல்)விற்கு செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர்களாக ஆக முடியும். இதையும் அல்லாஹ்(ஜல்) தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறான்.
இஸ்லாம், இறுதி வேதம்-அல்குர்ஆன், இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் மூலம் நிறைவடைந்து விட்டது. இறுதி இறை வேதம் அல்குர்ஆன் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் அடிப்படையில் வாழ்வோர் மட்டுமே இறைவனிடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர் ஆவர். இதுவே அல்லாஹ்(ஜல்)வின் நியதி. அதற்கு மாற்றமாய் வாழ்வோர் அல்லாஹ்விடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை மீறியவர் ஆவர்.
அ(த்தீய)வர்கள் அல்லாஹ்விற்கு அளித்த உடன்படிக்கையை அது கெட்டியானப் பின்னர் ஒப்படைக்கின்றனர். அல்லாஹ் எதனை இணைக்காறு ஏவினானோ அதனை துண்டிக்கவும் செய்கிறான். பூமியில் விஷமத்தனமும் புரிகின்றானர். (இத்தன்மைகளைக் கொண்ட) அவர்களே தாம் நஷ்டவாளிகள். (2:27)
மனித சமுதாயம் முழுமைக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்று மார்தட்டிக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், விதிமுறைகள் கட்டுப்பாடுகள் நியதிகள் எதையும் அறியாமல், அறிவதற்கு எவ்வித முயற்சியும் மேற்க்கொள்ளாமல், இஸ்லாத்திற்கு முற்ற முரணான மூட நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்கள் வெறுக்கத்தக்க அனாச்சாரங்களையும் நன்மை, புண்ணியம் என்று நடைமுறைப்படுத்திக் கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் தங்களுக்கு தான் இஸ்லாம் சொந்தம் என்றும் உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர் தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! சிந்தியுங்கள்!
மனிதர்கள்-மனிதர்களுக்காக உருவாக்கிய விதிமுறைகள் மீறப்படும் போது சொற்ப அவகாசம் கொடுக்கப்படுகிறது! பின் மீறியவர் தண்டிக்கப்படுகிறார்! இது மனித நியதி! ஆனால், அல்லாஹ் அருளிய கொள்கை வாழ்க்கை நெறி! ஏற்றுக் கொண்டவர்களால் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும் அதற்காக இம்மையில் எவ்வித தண்டனையும் இல்லை. இது அல்லாஹ்வின் பேரருள். இப்போது எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்(ஜல்) மனித சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பேரருள் புரிந்து கொண்டிருக்கின்றான் என்பதை உணர முடியும்.
இறைநெறியை மீறியோர்க்கு தண்டனை! மறுமையில் இது அல்லாஹ்(ஜல்) வின் நியதி. இறை நெறியைக் கடைப்பிடித்து மனித சமுதாயம் முழுமைக்கும் அதை எத்திவைக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட பரம்பரை-பெயர்தாங்கி முஸ்லிம்களே! அதை நீங்களே மீறிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும்.
இஸ்லாமிய நெறியை மீறிக்கொண்டே இஸ்லாமிய நெறிக்கு உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரைப் பெயர்தாங்கி முஸ்லிம்களே! இம்மையில் நீங்கள் ஏதேனும் காரணம் கூறி அதை மறைத்து விடலாம். அல்லது விதண்ட வாதம் செய்து மழுப்பி விடலாம். நாளை-மறுமை நாள்! அல்லாஹ்(ஜல்)வின் முன்னிலை! எந்த சாக்கு போக்குகள் சொல்லியும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இதை நம்மில் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்து இஸ்லாம் காட்டிய கொள்கை, கோட்பாடுகள், நெறிகள், நடைமுறைகளை அறிந்து ஒழுகி உண்மை முஸ்லிம்களாய் மாற ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். அல்லாஹ்(ஜல்) இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணரவும் உணர்த்தவும் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பவைகளை முறியடிக்கவும், முஸ்லிம்கள் அனைவரும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்கவும் அருள்பாலிப்பானாக. ஆமின்.

     முஹிப்புல் இஸ்லாம்

www.readislam.net

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes