Sunday, June 26, 2011

விண்ணுலகப் பயணம்

        سُبْحَانَ الَّذِى أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الاْقْصَى  தன் அடியாரை (மும்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர் ஆன் 17:1)
       அண்ணல் நபி அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். நபிகள் நாயகம் அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.
       அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. இதில் சந்தேகம் கொள்ளும் எவனும் முஸ்லிமாக இருக்கவும் முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிராஜை” கட்டாயம் நம்பியே ஆகவேண்டும். 
       இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்ராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
       மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ“ அவர்கள் “துல்கஃதா மாதத்தில் ஏற்பட்டது“ என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக நபித்தோழர்கள் ஜாபிர்  இப்னு அப்பாஸ்(ரலி)  இருவரும் ரபீவுல் அவ்வல் 12-ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27-ல் நடந்தது “ என்கிறார்.
       மிஃராஜ்  எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து  வேறுபாடு  தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.
       ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லியிருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவு வைத்திருப்பார்கள். இரண்டு, மூன்று அபிப்ராயங்கள் கொண்டிருக்க முடியாது. ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷூரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்ப வேண்டும். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
       இப்னு அப்பாஸ்(ரலி)  ஜாபிர்(ரலி)  உர்வா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபியுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27-ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.
       பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபியுல் அவ்வலை விட்டு விட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27”ஐத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
    அதன் சிறப்பை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தராத புதுப்புது வணக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இன்று மிஃராஜ் நல்லதொரு வியாபாரமாக ஆகிவிட்டது. பயான் செய்வோருக்கு நல்ல அறுவடை. “பெண்ணின் முகம், குதிரை உடல் “ கொண்ட விந்தைப் பிராணியை பிரிண்ட் செய்து இது தான் புராக் என்று விற்பனை ஒரு பக்கம். அதனை வீடுகளில் மாட்டிக் கொண்டு தாங்களே பூரிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மிஃராஜின் வணக்கங்கள், விசேஷத் தொழுகை, விசேஷ நோன்பு என்று அதன் முறைகளை விவரிக்கும் பிரசுரங்களின் வியாபாரம் இன்னொரு பக்கம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த விசேஷ வணக்கங்களை கண்ணாடி பிரேம் போட்டு தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்.
       பள்ளிவாசல்களின் அலங்காரம், பூக்கட்டுகள், புத்தாடை, நெய்ச்சோறு என்று நன்றாகவே மிஃராஜை ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் விடிய விடிய விழித்து விழாக் கொண்டாடி விட்டு சுபுஹுகள் தொழ பள்ளியில் இமாமையும் மோதினோரையும் விட்டு விட்டு செல்லும் ஊர்கள் எத்தனை?
      அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை, இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள். முஃமீன்களின் மிஃராஜாக இருக்கின்ற மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகையை தொழுது வருவோமாக! 

www.readislam.net

மிஃராஜ்

Post image for மிஃராஜ்
நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ”மிஃராஜ்” என அறியப்படுகிறது.
மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.

1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)
2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)
3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.
4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.
5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.
இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் ‘இஸ்ரா’வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.
இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:
இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை ‘புராக்’ என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.
பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு  திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.
அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ”நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ”எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹ்ா’விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.
பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.
பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.
அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள். மூஸா (அலை)
”தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்” என்று கேட்க நபி (ஸல்) ”ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்” என்று கூறினார்கள். மூஸா (அலை) ”நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ”நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.
திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ”நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ”நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)
மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:
”நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை” என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.
தொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் ‘இறங்கினார், பின்னர் நெருங்கினார்’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. ‘மிஃராஜ்’ தொடர்பான ஹதீஸில் வந்துள்ள ‘தனா ஃபததல்லா’ என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)
நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ”நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்” என்று கூறப்பட்டது.
ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, ‘இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்’ என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)
நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக். மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள். அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.
வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.
விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.
பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.
நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.
(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ”நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ற்யிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)
இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.
இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6 : 75)
நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,
(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20 : 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு ”அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக”
என்ற காரணத்தைக் கூறுகிறான். இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது. உலகத்தின் எவ்வளவு பெரிய சக்தியாயினும் சரி. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
இப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம். எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:
இந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1லில் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான். இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம்! உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:
முஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.
எனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹ்ீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான்; மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிஇருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.
மக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும்? அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது. இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.
ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.
நூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17 : 16, 17)
இது நாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.
இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான். முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.
இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
 நூல்:ரஹீக், தாருல் ஹுதா

www.readislam.net

Monday, June 20, 2011

நோன்பின் அவசியம்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
    ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)
    நோன்பின் நோக்கம்
    யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
    உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ
      நோன்பின் சிறப்பு
    ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ
    சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ
    நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ
    காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது
    அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா
    நோன்பு நோற்க கடமைபட்டவர்கள்,
    நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்
    எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)
    பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.
    பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து ‘அருகில் வாரும்’ என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத்
    மக்கா  மாநகரம்  வெற்றிக்  கொள்ளப்பட்ட  ஆண்டு  ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம்  என்ற  டத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு  ருந்தனர்.  பின்னர்  நபி صلى الله عليه وسلم  அவர்கள்  ஒரு  கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர்   அதனைப்  பருகினார்.   தன்    பின் மக்களில்  சிலர்   நோன்போடு ருப்பதாக  நபி صلى الله عليه وسلم அவர்களிடம்  கூறப்பட்டது. அதற்கு  நபி صلى الله عليه وسلم   அவர்கள்  “அத்தகையோர்  பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர்.     (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், திர்மிதீ)
    “இதன் பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்” என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத்
    மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம்.
    மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்
    நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
    கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்
    கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா
    சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
    நோயாளிகள், முதியவர்கள்
    நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி
    நோன்பின் நேரம்
    சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
    ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187)
       ஸஹர் உணவு
    நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ
     நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, திர்மிதீ
    (ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)
    ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்
    மக்கள்  உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும்.
    நபி صلى الله عليه وسلم அவர்கள் பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும்.
    பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
    பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
    பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
    விடி ஸஹர்
   விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள். இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும்.
    பசி முன்னிற்கும்போது
    உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
    மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்
    மறதியாக உண்பதும், பருகுவதும்
    ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா
    வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்
    வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
    ஒரு மனிதர் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம்  நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அவர் ‘இயலாது’ என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார்.
    பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை அவரிடம் வழங்கி ‘இதை தர்மம் செய்வீராக’ என்றனர். அதற்கவர் “எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே” என்றார். அதை கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா  நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா
    குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது
    நபி صلى الله عليه وسلم அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.
    நபி صلى الله عليه وسلم அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ, உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
    நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம்
    நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
    நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
    இரத்தம் குத்தி எடுத்தல்
    ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: தாரகுத்னீ
    நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி  நூல்கள்: புகாரி
    மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
    நோன்பு துறத்தல்
    நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
    உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்

www.readislam.net

இறுதிப் பேருரை



www.readislam.net

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes