Friday, July 8, 2011

பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது.
ஈஸா(அலை) அவர்கள் தனக்குப் பின்னர் “அஹ்மத்” என்ற புகழத் தக்க ஒரு தூதர் வருவார் எனக் கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது. (61:6) அதனை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தேற்றவாளர் என மொழியாக்கம் செய்து மறைக்க முயன்று வருகின்றனர்.
இவ்வாறே, எழுத-வாசிக்கத் தெரியாத ஒரு நபியின் வருகை பற்றி முன்னைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டதையும் (7:157) அல்குர்ஆன் கூறுகின்றது.
இது போன்றே பைபிளில் ஸஹாபாக்கள் பற்றிச் செய்யப்பட்டுள்ள முன்னறிவிப்புப் பற்றியும் அல்குர்ஆன் கூறுகின்றது.
பைபிள்…?
மூஸா நபிக்கு அல்லாஹ் தவறாத் வேதத்தை வழங்கினான். இது யூத-கிறிஸ்தவர்களால் (தோரா) என அழைக்கப்படுகின்றது. ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜீல் அருளப்பட்டது. இதைக் கிறிஸ்தவ உலகம் “சுவிசேஷம்” என்ற பெயரிலும், “நற்செய்தி” என்ற பெயரிலும் அழைக்கின்றது.
மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் ஏடுகளாக பைபிளின் முதல் 5 ஆகமங்களும் கருதப்படுகின்றன. அத்துடன் சேர்ந்து இன்னும் பல புத்தகங்கள் உள்ளன. அவை பழைய ஏற்பாடு என்றும், ஈஸா நபியின் போதனைகள் வரலாற்றைச் சுமார் 70 நபர்கள் எழுதினர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் மற்றும் போதகர்களின் கடிதங்கள், போதனைகள் “புதிய ஏற்பாடு” என்றும் நம்பப்படுகின்றன.
இவற்றில் அல்லாஹ் வழங்கிய வார்த்தைகளும், மனித வார்த்தைகளும் கலந்துள்ளன. அல்லாஹ்வின் வார்த்தைகளும் சிதைக்கப்பட்டுப் பொய்யும், மெய்யும் கலந்த கதம்பமாகவே பைபிள் உள்ளது. இருப்பினும் குர்ஆன் குறிப்பிட்ட பல முன்னறிவிப்புகள் பைபிளில் ஓரளவு சிதைவுடனாவது இன்று வரை காட்சியளிப்பது அற்புதமே! இந்த வகையில் ஸஹாபாக்கள் குறித்து தவ்றாத்-இன்ஜீலில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் குர்ஆனின் வசனம் குறித்து இங்கே சுருக்கமாக விளக்க முனைகின்றோம்.
“முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். மேலும், அவருடன் இருப்போர் நிராகரிப்பாளர்கள் மீது கடுமையானவர்களாகவும், தமக்கிடையே கருணையுடையோராகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத்தையும், அருட்கொடையையும் நாடி, ரூகூஃ செய்பவர்களாகவும், சுஜூது செய்பவர் களாகவும் அவர்களை நீர் காண்பீர். அவர்களது அடையாளம் அவர்களது முகங்களிலுள்ள சுஜூதின் அடையாளமாகும். இதுவே தவ்றாத்தில் அவர்களுக்குரிய உதாரணமாகும். இன்ஜீலில் மேலும் அவர்களுக்குரிய உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தனது முளையை வெளிப்படுத்தி, பின்னர் அதனைப் பலப்படுத்துகிறது. பின்னர் அது பலமாகித் தனது தண்டின் மீது நிலையாக நிற்கின்றது. விவசாயிகளை அது ஆச்சரியமடையச் செய்கின்றது. இவர்கள் மூலம் நிராகரிப்பாளர்களை அவன் கோபமூட்டுவதற்காகவே (இவ்வாறு செய்கின்றான்.) மேலும், அவர்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களிக்கின்றான்.” (அல்குர்ஆன் 48:29)
சூறதுல் ஃபத்ஹ் (வெற்றி) எனும் அத்தியாயத்தின் 29 ஆம் வசனம் இதுவாகும். இந்த வசனத்தில் நபித் தோழர்கள் பற்றி தவ்றாத்தில் சொல்லப்பட்ட ஒரு செய்தியும், இன்ஜீலில் சொல்லப்பட்ட ஒரு உவமையும் கூறப்படுகின்றன. இந்த உவமைகள் தவ்றாத்-இன்ஜீலில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இன்று இருக்கும் திரிபுபடுத்தப்பட்ட தவ்றாத், இன்ஜீல் இரண்டையும் உள்ளடக்கியதாக நம்பப்படும் பைபிளில் இந்த இரு செய்திகளும் இருப்பது அல்குர்ஆன் தெய்வீக நூல்தான் என்பதற்கான ஆதாரமாக அமைகின்றது.
தவ்றாத்தில் நபித்தோழர்கள்:
தவ்றாத்தில் நபித் தோழர்கள் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதாகக் குர்ஆன் கூறுகின்றது;
- அவர்கள் நிராகரிப்போருடன் கடுமையாக இருப்பார்கள்.
- தமக்கிடையே கருணையுடன் நடந்துகொள்வார்கள்.
- அதிகம் வணக்கம் செய்வார்கள்.
- அல்லாஹ்விடமிருந்து சுவனத்தையும், அவனது திருப்தியையும் எதிர்பார்த்தே வணக்கம் புரிவர்.
- “தொழுகை” எனும் வணக்கம் மூலம் இன்மையிலும், மறுமையிலும் அவர்களது முகங்கள் பிரகாசமாக இருக்கும் என்ற செய்திகள் கூறப்படுகின்றன. குறிப்பாக ஸுஜூது-றுகூஃ பற்றிப் பிரஸ்தாபிக்கின்றது.
மூஸா நபிக்கு அருளப்பட்டதாக நம்பப்படும் ஆகமங்களில் ஐந்தாவது ஆகமம் உபாகமமாகும். (இவற்றில் ஏராளமான பொய்களும், அபத்தங்களும், அசிங்கங்களும் நிறைந்திருக்கின்றன என்பது தனி விஷயம்.)
இந்த உபாகமம் 34 அதிகாரங்களைக் கொண்டது. இதில் 34 ஆம் அதிகாரம் மூஸா நபியின் மரணத்தின் பின்னர் இடைச் செருகல் செய்யப்பட்டது எனக் கிறிஸ்தவ மிஷனரிகளில் சிலரே நம்புகின்றனர். ஏனெனில், அதில் மூஸா நபியின் மரணம், அதற்காக மக்கள் துக்கம் கொண்ட நிகழ்ச்சியெல்லாம் இடம்பெற்றுள்ளன. இறுதி வசனத்தில் மூஸா நபி போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமூகத்தில் அதன் பின்னர் அனுப்பப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இது மூஸா நபியின் மரணத்தின் பின் நீண்ட காலத்தின் பின்னர் இடைச் செருகல் செய்யப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. எனவே உபாகமத்தின் இறுதி அத்தியாயம் 34 ஆம் அத்தியாயமல்ல; 33 ஆம் அத்தியாயமாகும். இது மூஸா நபியின் வஸிய்யத்தாகவும் இருக்கின்றது. இதோ! உபாகமம் அத்தியாயத்தின் 33 ஆம் அதிகாரத்தின் 1-3 வசனங்களைப் பாருங்கள்!
1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாத மானது:
2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
3. மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனை யடைவார்கள்.
(உபாகமம் 33:1-3)
அந்தப் போதனையைக் கொண்டு வந்த தூதர்;
- 10,000 பேருடன் பிரசன்னமாவர் என்று கூறப்படுகின்றது.
- அவர்கள் பரிசுத்தவான்கள் என்றும் கூறப்படுகின்றது.
- அவர்களுக்காக அக்கினி மயமான பிரமானம் அவரது வலது கையிலிருந்து புறப்படும்.
- ஜனங்களைச் சினேகிப்பர்.
- அவரது பரிசுத்தவான்கள் கடவுளின் கையில் இருப்பார்கள்.
- அவர்கள் கடவுளின் பாதத்தில் விழுந்து வணங்குவார்கள்.
- கடவுளின் வார்த்தைகளால் போதனையடைவார்கள்.
இத்தகைய செய்திகள் மூஸா நபியின் இறுதி உபதேசத்தில் அடங்கியுள்ளது.
இந்த இடத்தில் பாரான் மலை பற்றிக் கூறப்படுவதால் அந்த மலை பற்றி பைபிள் கூறும் செய்திகளை முதலில் ஆராய்வது அவசியமாகின்றது.
இஸ்மாயில் நபி பற்றி பைபிள் பேசும் போது அவன் பாரான் வனாந்திரத்தில் குடியிருக்கையில்… (ஆதியாகமம் 21:21) என்று குறிப்பிடப்படுகின்றது. எனவே பாரான் மலை என்பது இஸ்மாயில் நபியுடன் சம்பந்தப்பட்ட அறபுப் பிரதேசமாகும். இந்த இஸ்மாயில் நபியின் சந்ததியில்தான் முஹம்மத் நபி பிறந்தார். பாரான் மலையுடன் இஸ்ரவேல் தூதர்கள் எவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
எனவே பாரான் மலை என்பது அறபு நாட்டைத்தான் குறிக்கின்றது. அங்கு தன்னை நபியாகப் பிரகடனப்படுத்தி தேவனின் வார்த்தையைப் பிரசாரம் செய்தவர் முஹம்மத்(ஸல்) மட்டுமேயாகும்.
அவர்களது தோழர்கள் பற்றிப் பேசும் போது;
- ஜனங்களைச் சினேகிப்பர் என்று கூறப்படுகின்றது. அல்குர்ஆனும் அவர்கள் தமக்கிடையே பாசத்துடன் இருப்பர். சத்தியத்தை எதிர்க்காதோருடன் அன்பு பாராட்டுவர் என்றும் கூறுகின்றது.
- 10,000 பரிசுத்தவான்களுடன் அவர் பிரசன்னமாவார் என்று கூறப்படுகின்றது. “பத்ஹு மக்கா” எனும் மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் 10,000 நபித் தோழர்களுடன் பிரசன்னமாகிச் சிலைகளால் அசுத்தப்பட்டிருந்த தேவ ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தினார்கள். இந்த வரலாறு வேறு எந்தச் சமூகத்திலும் நடைபெறவில்லை.
- அக்கினி மயமான பிரமானம் பற்றி பைபிள் கூறுகின்றது. சத்தியத்தை எதிர்க்கும் நிராகரிப்போர் விடயத்தில் அவர்கள் அக்கினி மயமாகப் போராடுவர்; கடுமையாக நடந்துகொள்வர் என்பதை இது குறிக்கின்றது. போர்க் காலங்களில் இரத்த உறவை விடக் கொள்கைக்கு முன்னுரிமையளித்து அவர்கள் இறை நிராகரிப்பின் மீதுள்ள தமது கடுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
- அவரது – அதாவது, நபியவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள் கடவுளின் கையில் இருப்பார்கள் என்பதன் மூலம் அல்லாஹ்விடம் பெரும் நன்மையையும், அவனது திருப்பொருத்தத்தையும் மட்டுமே அவர்கள் எதிர்பார்த்துப் பணியாற்றுவார்கள் என்பது கூறப்படுகின்றது. இதையே அவர்கள் அல்லாஹ்விடத்தில் சுவனத்தையும், அவனது திருப்பொருத்தத்தையும் எதிர்பார்ப்பார்கள் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
அவர்கள் கடவுளின் பாதத்தில் விழுந்து வணங்குவார்கள் என்று பைபிள் கூறுகின்றது. அல்குர்ஆன் மூஸா நபியின் வேதத்தில் “அவர்கள் ஸுஜூது செய்வார்கள்” என்று கூறப்பட்டுள்ளதாகக் கூறுகின்றது. “ஸுஜூது” என்றால் கால்பாதத்தின் முன்பகுதி, முழங்கால்கள், உள்ளங்கைகள், நெற்றி, மூக்கு என்பன நிலத்திற்பட விழுந்து வணங்குவதாகும். இதையே பைபிள் கடவுளின் பாதத்தில் விழுந்து வணங்குவார்கள் என்று கூறுகின்றது.
` கடவுளின் வார்த்தைகள் மூலம் நபித் தோழர்கள் போதனையடைவார்கள் என பைபிள் கூறுகின்றது. அல்குர்ஆன் (கலாமுல்லாஹ் – அல்லாஹ்வின்) தேவனின் வார்த்தைகளாகும். நபித் தோழர்கள் அல்குர்ஆன் மூலம் போதனை பெற்றே பரிசுத்தவான்களாக மாறினார்கள் என்பது வரலாறாகும்.
எனவே, நபித் தோழர்கள் பற்றித் தவ்றாத்தில் கூறப்பட்டதாக அல்குர்ஆன் கூறிய செய்தி திரிபுபடுத்தப்பட்ட தவ்றாத்திலும் அப்படியே இடம்பெற்றிருப்பது அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாகும்.
புதிய ஏற்பாட்டில் நபித் தோழர்கள்:
இன்ஜீலில் நபித் தோழர்கள் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது;
“..இன்ஜீலில் மேலும் அவர்களுக்குரிய உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தனது முளையை வெளிப்படுத்திப் பின்னர் அதனைப் பலப்படுத்துகிறது. பின்னர் அது பலமாகித் தனது தண்டின் மீது நிலையாக நிற்கின்றது. விவசாயிகளை அது ஆச்சரியமடையச் செய்கின்றது. இவர்கள் மூலம் நிராகரிப்பாளர்களை அவன் கோப மூட்டுவதற்காகவே (இவ்வாறு செய்கின்றான்.)..” (அல்குர்ஆன் 48:29)
ஒரு விவசாயி ஒரு பயிரை நடுகின்றான். அது தனது முளையை வெளிப்படுத்துகின்றது. பின்னர் அந்த முளை பலப்படுகின்றது. பின்னர் அது தனது தண்டின் மீது பலம் பெற்றுத் தனியாக நிற்கின்றது. அதன் வளர்ச்சியும், அதன் மூலம் கிடைக்கும் பலனும் விவசாயியை ஆச்சரியமடையச் செய்கின்றது. எதிரிகளைக் கோபங்கொள்ளச் செய்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் தனி நபராகத் தனது பிரசாரப் பயணத்தை ஆரம்பித்தார்கள். ஒருவர்-இருவராகச் சத்தியத்தை ஏற்றனர். பலஹீனமான நிலையிலிருந்தனர். எதிரிகளில் அச்சுறுத்தல்களைச் சந்தித்தனர். பின்னர் அவர்கள் சிறுகச் சிறுகப் பலம் பெற்று வளர்ச்சியடைந்து தமது சொந்தப் பலத்தில் நிமிர்ந்து நின்றனர். பின்னர் அந்த நபித் தோழர்கள் – மரங்கள் கனிதர ஆரம்பித்தனர். விவசாயியே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களின் வளர்ச்சியிருந்தது. இதைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்காத எதிரிகள் பொறாமை கொண்டார்கள் என்றும் இந்த வசனம் கூறுகின்றது.
இந்த வர்ணனை இன்ஜீலில் இருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
இதோ! புதிய ஏற்பாட்டின் மத்தேயு சுவிசேஷத்தின் 13 ஆம் அதிகாரத்தின் 3-9 வரையுள்ள வசனங்களைப் படித்துப் பாருங்கள்!
3. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதை பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
(மத்தேயு 13:3-9)
இந்த உவமானத்தில் இயேசு ஒரு விவசாயி பற்றிக் கூறுகின்றார்கள். அவர் விதைக்கும் போது சில தவறி விழுந்து விடுகின்றன. அதைப் பறவைகள் கொத்திச் செல்கின்றன. சில செத்து விடுகின்றன என்றெல்லாம் கூறுகின்றார்.
நபி(ஸல்) அவர்கள் செய்த போதனைகளைச் சிலை வணங்கிகள் மறுத்தனர். நயவஞ்சகர்கள் ஏற்றது போல் நடித்தனர். ஆனால், உள்ளத்தில் ஈமான் இல்லாததால் அவர்களுக்கு அது பயன் தராது போயினர். சிலர் ஏற்றுப் பின்னர் சோதனைகளின் போது தடம் புரண்டனர். ஆனால் உண்மையான நபித் தோழர்கள் பயிரைப் போன்று வளர்ந்து உறுதி பெற்று பலன் தர ஆரம்பித்தனர். இதைக் காதுள்ளவன் கேட்டுப் பயன் பெற வேண்டுமென்று இயேசு கூறியதாக மத்தேயு கூறுகின்றது.
இது பரலோக ராஜ்யத்தின் இரகசியங்கள் என்று வேறு இயேசு கூறியதாக 11 ஆம் வசனம் கூறுகின்றது.
அவதானிக்க வேண்டிய அம்சம்:
மூஸா நபியினதும், ஈஸா நபியினதும் இந்த இரு முன்னறிவிப்புகளும் இறுதித் தூதர் தன் தோழர்கள் மூலம் பலம் பெற்றுத் தனது தூதை உறுதிப்படுத்துவார். அவர் தனது தோழர்களுடன் வளர்ந்து வெற்றிவாகை சூடுவார் என்பது பற்றிப் பேசுகின்றது.
இந்த உவமைகள் தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இருக்கின்றன என அல்குர்ஆன் கூறுகின்றது. இது பற்றி அல்குர்ஆன் பேசும் வசனம் (வெற்றி) “அல்ஃபத்ஹ்” என்ற அத்தியாயத்தில்தான் இடம்பெற்றுள்ளது.
அதாவது, முஸ்லிம்களால் மக்கா வெற்றிகொள்ளப்படும் என்பது குறித்து அது நடப்பதற்குச் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் அருளப்பட்ட அத்தியாயத்தில் மூஸா நபி, இயேசு ஆகியோர் இந்த வெற்றி குறித்து முன்னறிவிப்புச் செய்த வசனம் இடம்பெற்றுள்ளது.
நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் மக்காவுக்கு உம்றாச் செய்யச் சென்ற போது மக்கத்துக் காஃபிர்கள் தடுத்தனர். அப்போது ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது “ஹுதைபிய்யா உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கையின் படி முஸ்லிம்கள் குறித்த ஆண்டில் உம்றாச் செய்ய முடியாது; அடுத்த ஆண்டு உம்றாச் செய்யலாம்.
இது நபித் தோழர்களுக்கு மனக் கவலை அளித்த போதுதான் இந்த அத்தியாயம் அருளப்பட்டது.
“(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு மிகத் தெளிவான வெற்றியை வழங்கினோம்;.” (48:1)
என்றே இந்த அத்தியாயம் ஆரம்பமாகின்றது. இந்த அத்தியாயம் அருளப்பட்டதும் இனிக் குறைஷிகள் எம்மை நோக்கிப் படையெடுத்து வர மாட்டார்கள். நாம் (மக்கா வெற்றிக்காகப்) படை திரட்டிக் கொண்டு செல்வோம் என நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
குறைஷிகள் ஒப்பந்தததை முறித்த போது இது நடந்தது.
உம்றாச் செய்ய முடியாமல் திரும்பும் போது கவலைகொண்ட நபித் தோழர்களுக்கு உங்களைப் பற்றி மூஸாவின் தவ்றாத்திலும், ஈஸாவின் இன்ஜீலிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் பலம் பெற்று வெற்றிவாகை சூடுவீர்கள் என்ற முன்னறிவிப்பு உள்ளதென்று கூறுவது பொருத்தமாகவுள்ளதுடன், ஆழமாகவும் சிந்திக்கவும் வேண்டிய அம்சமாகும்.
அடுத்து, இந்த முன்னறிவிப்புப் பற்றிப் பேசும் வசனத்திற்கு முன்னைய வசனம் இஸ்லாம் மேலோங்கும் என்பதைக் கூறித்தான் இது குறித்த முன்னறிவிப்பும், உங்கள் பற்றிய வர்ணனையும் முன்னைய வேதங்களில் உள்ளன என்றும் கூறுகின்றது.
இதற்கு முன்னைய வசனம்;
“அனைத்து மதங்களை விடவும் மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியையும், இ(ச்சத்திய மார்க்கத்)தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். சாட்சி கூற அல்லாஹ்வே போதுமானவன்.”
(அல்குர்ஆன் 48:28)
எனவே, பைபிளில் ஒரு முன்னறிவிப்பு உள்ளது என அல்குர்ஆன் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் எழுதவோ, வாசிக்கவோ தெரியாத ஒரு நபி. அவர் வேதம் பற்றி 40 வயது வரை அறியாதவராகவே இருந்தார். அவர் போதித்த வேதத்தில் முன்னைய வேதத்தில் இப்படி இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. அது அப்படியே முன்னைய வேதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரும் இருப்பது அல்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாகத் திகழ்கின்றது.

www.islamkalvi.com

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes